மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் இலங்கை அணி 160 ஓட்டங்களால் வெற்றியீட்டியது இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் 3–0 விகிதத்தில் இலங்கை அணி வென்றுள்ளது. ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்கைளக் குவித்தது. அணித்தலைவி சமரி அத்தபத்து 106 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டறிகள் உட்பட 91 ஓட்டங்களைக் குவித்தார்.
நிலக் ஷிகா சில்வா 78 பந்துகளில் 63 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி 46 பந்துகளில் 55 ஓட்டங்களையும் விஷ்மி குணரட்ண 60 பந்துகளில் 44 ஓட்டங்களையும் குவித்தனர். மேற்கிந்திய பந்துவீச்சாளர்களில் கரிஷ்மா ராம்ஹராக் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த் தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி, இலங்கை வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறியது. 34.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுடன் அவ் வணியின் சகல விக்கெட்களும் வீழ்ந்தன.
செடீன் நேஷன் 57 பந்துகளில் 46 ஓட்டங்களையும் ஆலியா அலீன் 27 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர். மேற்கிந்திய அணியில் வேறு எவரும் 20 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெறவில்லை.இலங்கை பந்துவீச்சாளர்களில் சச்சினி நிசன்சலா ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஒருநாள் சர்வதேச போட்டியில் நிசன்சலா 5 விக்கெட்களை கைப்பற்றியமை இதுவே முதல் தடவை. 22 வயதான நிசன்சலாவின் 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி இது.
ஓஷதி ரணசிங்க 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார். உதேஷிகா பிரபோதினி 6 ஓவர்கள் பந்துவீசி 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சுமரி அத்தபத்து 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் காவ்யா காவிந்தி 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.இத்தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்களாலும், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்களாலும் இலங்கை வெற்றியீட்டியிருந்தது.
கடந்த 16 வருடங்களில் மேற்கிந்திய மகளிர் அணியுடனான இரு தரப்பு ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை மகளிர் அணி வென்றமை இதுவே முதல் தடவையாகும்.அதேவேளை, மேற்கிந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் சகல போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றியீட்டி வெள்ளையடித்தமை இது இரண்டாவது தடவையாகும்