பலவீனமான ஆட்சியாளர்களும், பாதுகாப்பு படை பிரதானிகளும் இருக்கும் வரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இனங்காண முடியாது.
எவ்வாறிருப்பினும் இதனை வருடக்கணக்கில் காலம் தாழ்த்துவதற்கு இடமளிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
அத்தோடு இழப்பீடு செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போதாது என்றும், அவர் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 21 ஆம் திகதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பேலியகொடையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் , உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. இது அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இடம்பெற்ற சம்பவம் என்று நாம் நம்புகின்றோம்.
பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நாம் ஏற்கனவே பதிலளித்து விட்டோம். இராணுவத்தினரால் அந்த செயற்பாடுகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளன. அதே போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் அற்ற ஆட்சியாளர் இருந்தால் மாத்திரமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இனங்காண்பதில் வருடக்கணக்கில் காலம் செல்லும். இது பலவீனமான பாதுகாப்பு அதிகாரிகளின் நிலைப்பாடாகும். அவ்வாறு காலம் கடத்துவதற்கு இடமளிக்க முடியாது.
ஆட்சியாளர்களும், பாதுகாப்புப் படை பிரதானிகளும் சிறப்பாக செயற்பட்டால் சூத்திரதாரிகளை இலகுவான இனங்காணலாம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முட்டாள் தனமான கருத்துக்களுக்கு எம்மால் பதிலளிக்க முடியாது.
அவரை சிறைலடைக்க வேண்டும். இழப்பீடு வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்பு போதுமானதல்ல என்பதே எனது நிலைப்பாடாகும். அவருக்கு இதனை விட கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.