யாழில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு!

0
5

எதிர்வரும் மே மாதம் வியாழக்கிழமை (06) ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு வியாழக்கிழமை (18) நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இந்த  செயலமர்வு  நடைபெற்றது.

இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவிக்கையில், 

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற த் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய முழுமையான பொறுப்பு மற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதால் இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது மிகக் காத்திரமானது எனத் தெரிவித்தார். 

மேலும் கடந்த தேர்தலில்களில் கற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக்கொண்டு சில அசெளகரியங்கள் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு ஏற்பட்டிருந்தால் அவற்றை இம்முறை தவிர்த்து மென்மேலும் வினைத்திறனாக செயற்படுமாறும் தெரிவித்ததுடன், இம் முறை வட்டார ரீதியாக வாக்கெண்ணல் நடைபெறவுள்ளதால் தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்தும் அதற்கான ஒத்துழைப்பினையும், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பாா்வைக்குறைபாடுடையவர்களுக்கான வசதிகளை அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார்.

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் இ. சசீலனால் விளக்கமளிக்கப்பட்டது.