இந்தியா மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, படகு ஓட்டுநருக்கு 35 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாகபட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்க வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி கடற்படையின் ரோந்து படகு மீது இந்திய இழுவைப்படகு மோதியதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இது தொடர்பில் 10 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதி சுபரஞ்சனி ஜெகநாதன் 9 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நடுக்கடலில் படகு மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்துக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடும், கடற்படை ரோந்து படகு சேதமடைந்ததால் 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு என மொத்தமாக 35 இலட்சம் ரூபாய் அபராதத் தொகையை படகு ஓட்டுநர் கட்ட வேண்டும் எனவும் அபராதத் தொகையை கட்டத் தவறும்பட்சத்தில் படகு ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை, விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களை மெரிகான சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படகு ஓட்டுநர் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.