ரணிலின் சவாலுக்குப் பின்னால்?

0
197

சர்வ கட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை.
ஆனால் தமிழரசுக் கட்சி பங்குகொண்டிருந்தது.
இது இரண்டாவது சர்வகட்சி சந்திப்பு.
ரணில் அரசியல் பிரச்னையை எவ்வாறு தீர்க்கப் போகின்றார், இந்தக் கேள்வியுடன் நாட்கள் நகர்கின்றன.
இந்த சந்திப்பின்போது, ரணில் ஒரு விடயத்தை அழுத்திக் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதாவது, தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தை கொண்டு, அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவேன்.
அத்துடன் அவர் பிறிதொரு விடயத்தையும் வலியுறுத்தியிருக்கின்றார்.
அதாவது, நடுவில் நிற்க முடியாது – ஒன்றில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவேண்டும் அல்லது இல்லாமலாக்க வேண்டும்.
முடிந்தால் ஒரு திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமலாக்கிக் காட்டுங்கள்.
அதனை செய்யும் வல்லமையோடு எவருமில்லை என்பதை ரணில் நன்கறிவார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம், நடைமுறைக்கு வந்த 13ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள விடயங்கள் காலத்திற்கு காலம் பிடுங்கப்பட்டிருக்கின்றது.
ஆனாலும் கடந்த 35 வருடங்களாக, 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றிலுமாக இல்லாமலாக்கும் முயற்சியில் எந்தவொரு அரசாங்கமும் ஈடுபடவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ அதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிந்தது.
புதுடில்லியின் ஆசிர்வாதத்துடன் சில விடயங்களை செய்யலாமென்று கோட்டாபய முயற்சித்ததாகவே தெரிந்தது.
இந்த நோக்கத்தினடிப்படையில்தான் மிலிந்த மொறகொட இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
மாகாண சபை முறைமை, நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்னும் பிரசாரத்துடன்தான் மிலிந்த மீளவும் அரசியல் அரங்கிற்குள் பிரவேசித்தார்.
ஆனால் தூதுவராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, அது தனது தனிப்பட்ட கருத்தென்று கூறி பின்வாங்கினார்.
கோட்டாபயவோ ஆட்சியையிழந்து அரசியல் அநாதையானார்.
இந்த பின்புலத்தில் நோக்கினால், அவ்வப்போது, சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் கூக்குரலிட்டாலும் கூட, ஆட்சியிலிருந்தவர்கள் எவருமே 13ஐ இல்லாமலாக்க முயற்சிக்கும் விசப்பரீட்சையில் ஈடுபடவில்லை.
இதற்கு காரணம் இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும்.
இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, இரண்டு நாடுகளுக்கிடையிலான உடன்பாடு.
அதனை ஒரு நாடு தன்னிச்சையாக மீற முடியாது.
அவ்வாறு மீறினால் இந்தியா அதற்கு பதிலளிக்கும்.
அந்தப் பதில் எவ்வாறும் அமையலாம்.
இதனைக் கருத்தில் கொண்டே, ஆட்சியாளர்கள் அதனை முற்றிலுமாக இல்லாமலாக்க முயற்சிக்கவில்லை.
ஆனால் அதனை முழுமையாக அமுல்படுத்துவதை ஏதோவொரு வகையில் இழுத்தடித்து அல்லது புறம்தள்ளி வந்தனர்.
இன்றுவரையில் அதுதான் நிலைமை.
இவ்வாறானதொரு சூழலில்தான், ரணில் விக்கிரமசிங்க தற்போதை நெருக்கடி நிலைமையை கருத்தில்கொண்டு, 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக கூறுகின்றார்.
இந்தியாவும் அதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
அதேவேளை ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையிலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த விடயங்களிலுள்ள சிக்கல்களை ஏனையவர்களை விடவும் ரணில் விக்கிரமசிங்க நன்கறிவார்.
அதேவேளை 13 இற்கு அப்பால் செல்வதற்கான அழுத்தங்களும் ஆட்சியாளர்களுக்கில்லை.
இதனையும் ரணில் நன்கறிவார். சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிகம் பேசிக்கொண்டாலும், தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வைத்தான் வழங்கவேண்டுமென்று வெளிஅழுதங்கள் இல்லை.
இந்த பின்புலத்தில் நோக்கினால் 13இற்கு அப்பால் செல்லவேண்டிய நெருக்கடிகள் சிங்கள ஆட்சியாளர்களுக்கில்லை.
இதனை கருத்தில் கொண்டே, தேசிய இனப்பிரச்னையை 13இன் அடிப்படையில் தீர்க்கும் நகர்வுகளை ரணில் முன்னெடுத்து வருகின்றார்.
ரணில் ஒரு வேளை இந்த விடயத்தில், உண்மையான ஈடுபாட்டுடன் இருந்தால், இதில் சில முன்னேற்றங்களுக்கு வாய்ப்புண்டு.