ராஜகுமாரி கொலைச்சம்பவம் – நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு !

0
199

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண்ணின், மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் உத்தியோகத்தர், இரண்டு சார்ஜன்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக 4 உத்தியோகத்தர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் ன்னிலைப்படுத்தப்பட்டனர்.


இதன்போது, அவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெக்குனவல உத்தரவிட்டுள்ளார்.

தமது வீட்டில் பணிபுரிந்தபோது தங்க நகையை திருடியதாக தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தன என்பவர் வெலிக்கடைபொலிஸ் நிலையத்துக்கு அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி 42 வயதுடைய ராஜகுமாரி என்ற பணிப்பெண் வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பின்னர், அன்றைய தினம் இரவு குறித்த பெண், திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்தநிலையில் உயிரிழந்த பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி, கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.