ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களுடன் கூட்டுச் சேரக்கூடாது என பெரும்பாலான வாக்களர்கள் தெரிவித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
டெய்லி மிரர் நடத்திய கருத்துகணிப்பில் 76 வீதமானவர்கள் ராஜபக்சக்களுடன் கூட்டு சேரக் கூடாது என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகணிப்பில் பங்கெடுத்தவர்களில் 76 வீதமானவர்கள் கூட்டுச்சேர கூடாது என தெரிவித்துள்ளதுடன், 21 வீதமானவர்கள் அவ்வாறு செய்வது சரியெனவும் பதிலளித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மூன்று வீதமானவர்கள் தெரியாது என பதிலளித்துள்ளதாகவும் அந்தக் கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்படைந்துள்ளது.
ஒவ்வொரு தரப்பினர்களையும் வளைத்துப் போடும் முயற்சியில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பலர் கட்சி தாவல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துள்ளனர்.
இதுவொருபுறமிருக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலும் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், அதன் முக்கிய உறுப்பினர்கள் ரணில் பக்கம் செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.