30 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரிஷாத் பதியுதீன் கைது!

அலசுவது இராஜதந்திரி-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் கைதாகியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுடன் நெருக்கமாக இருந்ததோடு, அவர்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தனர் என்ற குற்றச்சாடடின் கீழேயே ரிஷாத் பதியுதீனும் அவரது சகோதரரும் தற்போது கைதாகி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு கொழும்பு, நீர்கொழும்பு, மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளின் தாக்குதல்கள் இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின்போதுகூட நடத்தப்பட்டிராத ஒன்றாகவே கருதக்கூடியதாக இருந்தது.

பேராயரின் அதிருப்தி

தற்கொலைக் குண்டுதாரிகள் உட்பட 300 பேரை பலியெடுத்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள தறுவாயில், அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்தும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதன் பின்னணியிலேயே தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியதீனும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கைதாகியுள்ளனர்.

பாப்பரசர், பேராயரின் நிலைப்பாடு

இத்தடவை இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பரிசுத்த பாப்பரசரும், இலங்கையின் கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித்தும் குற்றவாளிகளுக்கு தாம் மன்னிப்பு வழங்க தயங்கப்போவதில்ல எனவும் ஆனால், அவர்கள்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, சட்டத்தின் முன்பாக அவர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் கைதாகியுள்ள விடயத்தை நோக்கும்போது, ‘எய்தவனிருக்க அம்பை நொந்தது’ போன்ற அபிப்பிராயமே ஏற்படுவதாக இருக்கின்றது. பேராயர் ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் ஒரு சதித்திட்டமே இருப்பதுபோன்ற சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தெரிவிக்கையில், இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் உட்பட 702 பேர் கைதாகியுள்ளதாகவும், இவர்களில் 202 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன் பயங்கரவாத தடுப்புப்பிரிவில் 83 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அனுபவமிக்க துறைகள்

இலங்கையின் புலனாய்வுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு என்பவற்றை நோக்கும்போது, பயங்கரவாத செயற்பாடுகள் குறித்த இப் பிரிவுகளின் நடவடிக்கைகள் மிக அனுபவம் வாய்ந்தவையாகவே இருக்கவேண்டும்.

ஏனெனில், சுமார் மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கை எண்ணிலடங்காத பல்வேறு வடிவத்திலுமான குண்டுவெடிப்புகளை சந்தித்ததோடு, பெருமளவு உயிரிழப்புகளையும் எதிர்கொண்ட ஒரு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலுள்ள முன்னணி புலனாய்வு பிரிவுகளுடனும் இலங்கை தொடர்புகளை கொண்டுள்ளது. இருந்தபோதிலும், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகள் குறித்து இந்தியா இலங்கைக்கு முன்னெச்சரிக்கையையும் வழங்கியிருந்தது.

ஆனால் அவையாவற்றையும் புறக்கணித்துவிட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு ‘செங்கம்பள வரவேற்பு’ வழங்கியது போலவும் அன்றைய ஆட்சியாளர்கள் நடந்துகொண்டிருந்தனர்.

குண்டு வெடிப்புகள் இடம்பெற்றபோது நாட்டில் அன்றைய ஜனாதிபதி இருந்திருக்கவில்லை. அத்துடன், அன்றைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தமக்கு இக் குண்டு வெடிப்பு பற்றிய புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் அதனை தம்மால் தடுத்திருக்க முடியும் என்று ‘சிறுபிள்ளைத்தனமாக’ குறிப்பிட்டிருந்தார்.

இதன்மூலம், ஆட்சியிலிருப்போர் மற்றும் புலனாய்வுத்துறை சார்ந்த பாதுகாப்புத் துறையினர் மட்டத்தில் தகுந்த தொடர்பாடல்கள் இல்லாதிருந்திருப்பதையே அவதானிக்க முடிகின்றது.

’செல்லப்பிள்ளை’ ரிஷாத்  

ரிஷாத் பதியுதீன் தற்போது 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து கைதாகியுள்ளார். ஆனால், ரிஷாத் பதியுதீனின் நடவடிக்கைகள் கடந்த சில வருடங்களாகவே சந்தேகத்துக்குரிய முறையிலேயே நோக்கப்பட்டு வந்தன.

தேசிய வனமான வில்பத்தில் காடழிப்பு மற்றும் அங்கே புதிய குடியேற்றங்களை நிறுவியமை சம்பந்தமாகவும் அவர்மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோது அவைபற்றி கண்டுகொள்ளாமல் அன்றைய ஆட்சியாளர்கள் நடந்து கொண்டனர்.

ஆனால் தற்போது வெள்ளம் ‘தலைக்கு மேல் வந்ததையடுத்தே’ ரிஷாத் பதியுதீனை ஒரு காலத்தில் அதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தவேளையில் ஜனாதிபதியாகவும், பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்து தடவிக்கொடுத்தவர்கள், இன்று தமது ஆட்சியில் அவரை கைதுசெய்துள்ளமை வேடிக்கையான ஒரு நடவடிக்கையாகவே இருக்கின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles