ரெலோவின் அழைப்பு?

0
136

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறை ஒன்றை வகுப்பதற்காக ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது.
ரணில் விக்கிரமசிங்க தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வை காண்பதற்காக அனைத்து கட்சிகளுடன் பேசவுள்ளாரென அறிவித்திருக்கும் நிலையில்தான் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் அசைய ஆரம்பித்திருக்கின்றன.
உண்மையில் இது ஒரு காலம்கடந்த அழைப்பு.
ரெலோ கூட்டமைப்பின் ஆரம்பகர்த்தாக்களில் ஒன்று.
யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறை ஒன்றில்லையென்றும், அதனை வகுப்பதற்கு வருமாறும் ரெலோ அழைப்பு விடுத்திருக்கின்றது.
இது தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களும் அரசியல் அவதானிகளும் அவ்வப்போது கூறிவந்திருக்கின்றனர்.
ஆனால், அதனை ரெலோ உட்பட எந்தவொரு தமிழ் தேசிய கட்சியின் தலைமையும் கருத்தில்கொண்டதில்லை.
குறிப்பாக ரணில் – மைத்திரி ஆட்சிக்காலத்தை எவ்வாறு அணுக வேண்டுமென்று போதியளவு பொதுவெளிகளில் விவாதிக்கப்பட்டன.
இப்போது ரெலோ கூறுவதை, அப்போது அரசியல் ஆய்வாளர்கள் சிலர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
ஆனால், சம்பந்தன் எதனையுமே கருத்தில்கொள்ளவில்லை.
புதிய அரசியல் யாப்பென்னும் மாயமானுக்கு பின்னால் சென்று, ஐந்து வருடங்கள் வீணாகின.
அப்போது ஒரு பொறிமுறை ஊடாக விடயங்கள் அணுகப்பட்டிருந்தால், அரசமைப்பில் இருப்பதை முழுமையாக அமுல்படுத்தியிருக்கலாம்.
அதற்கப்பாலும் சென்றிருக்கலாம்.
ஆனால், வாய்ப்புகள் அனைத்தும் வீணாகின.
இப்போது மீளவும் ரணில் விக்கிரமசிங்கவுடன் எவ்வாறு பேசுவதென்னும் கேள்வி எழுந்திருக்கின்றது.
இதற்கானதொரு பொறிமுறையை வகுக்கவேண்டுமென்னும் வாதம் மேலெழுந்திருக்கின்றது.
இப்போதாவது ரெலோ இதுபற்றி அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்கலாம்.
ஆனால், ரெலோவின் அழைப்பும் அதனை அடிப்படையாகக் கொண்ட அணுகு முறைகளும் வெறும் பேச்சளவில் முடிந்துவிடக்கூடாது.
சமஷ்டி என்பது பொறிமுறையின் இறுதி இலக்காகவே இருக்க வேண்டும்.
அரசியல் தீர்வுக்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்கின்றபோது, புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்களுடன் உரையாடி ஓர் ஆவணத்தை தயார் செய்ய வேண்டும்.
இதற்கான ஆரம்பமாக, முதலில் கட்சிகளுக்கு வெளியிலுள்ளவர்களோடும் ரெலோ ஓர் உரையாடலை செய்யலாம்.
ரெலோவின் முயற்சியால் ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டைக் கோரி, கடிதமொன்று அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அனுப்பபபட்டிருந்தது.
அந்தக் கடிதம் அனுப்பும் விடயத்திலும் பலவாறான கருத்துக் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.
அவ்வாறான குழப்பங்கள் மீளவும் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே, அவற்றை தவிர்க்கும் வகையில், முதலில் புத்திஜீவிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோருடன் உரையாடி, ஓர் ஆரம்ப வரைவை தயார்செய்துகொள்ள வேண்டும்.
அதன் பின்னரே கட்சிகளை இணைத்து அரசியல் தீர்வுக்கான பொறிமுறையை வடிவமைக்க வேண்டும்.
இந்தப் பொறிமுறை வெறும் கற்பனாவாதங்களை முன்னிலைப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
உடனடி, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் விடயங்களை கையாளுவதாக இருக்க வேண்டும்.
முதலில் மாகாண சபை தேர்தல் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் உடனடிக் கோரிக்கையாக இருக்க வேண்டும்.
பின்னர் கால மாற்றங்களில் அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டும்.
அவ்வாறில்லாது, எடுத்த எடுப்பிலேயே, சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தினால், அது ரணில் விக்கிரமசிங்கவுக்கே சாதகமாகும்.
அனைத்து தரப்புக்களும் உடன்பட்டால் மட்டுமே தன்னால் விடயங்களை முன்னெடுக்க முடியுமென்று கூறிவிட்டு ரணில் இலகுவாக இந்த முன்னெடுப்பிலிருந்து வெளியேறிவிடலாம்.
ஏனெனில், நமது சமஷ்டி கோரிக்கைக்கு வெளியாரின் ஆதரவு சிறியளவில்கூட இல்லை.
இவற்றை கருத்தில் கொண்டுதான், தமிழ் கட்சிகள் செயல்பட வேண்டும்.
இந்த பின்புலத்தில் ரெலோவின் அழைப்பு வரவேற்கத்தக்கது.
ஆனால், இதனை யதார்த்தமான சிந்தனையுடனும் நேர்த்தியாகவும் முன்னெடுப்பதில்தான் அடுத்தகட்டம் தங்கியிருக்கின்றது.