இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதுவரை நடைபெற்ற இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என 51 ஓட்டங்களைக் குவித்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களையும், ரி-20 தொடரில் 182 சிக்சர்களையும், ரெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களையும் விளாசியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெயில் 553 சிக்சர்களுடன் முதலிடத்திலும் இரண்டாம் இடத்தில் ரோகித் சர்மா உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.