வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தேன். அங்கே வடக்கு மாகாணத்திலும் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வேலையில்லா பட்டதாரிகள் தங்களின் பிரச்சினைகளை முன்வைத்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதுடன் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
இந்த வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன? அவர்கள் தொடர்பான வேலைத்திட்டம் என்ன? அரசாங்கத்தின் கொள்கை என்ன? அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுமா? அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏன் எங்களை நியமிக்க முடியவில்லை என்று கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை அறிக்கையை சபையில் முன்வைக்கின்றேன்.
இதேவேளை நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. எமது இலவச கல்வியை பெற்று பின்னர் வேலையில்லா வரிசைக்குள்ளா அவர்கள் செல்லப் போகின்றனர்?. இதனால் இவர்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்வு தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றார்.