இடமாற்றத்தை வலியுறுத்தி வடக்கு மாகாண அரச சாரதிகள் யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வட மாகாண ஆளுநர் அலுவலக்கத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஆளுநருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை வட மாகாண ஆளுநரின் பிரதிநிதியிடம் கையளித்துள்ளனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணம், கைதடியில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக வட மாகாண பிரதமர செயலாளரின் அலுவலகம் வரை சென்று பிரதம செயலாளரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து வட மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்ற இடமாற்றம் வழங்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டியுள்ள வடக்கு மாகாண அரச சாரதிகள் இடமாற்றத்தை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டால் போராட்டம் கைவிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
