களுத்துறையில் இருந்து இன்று அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமும் விமானப்படை வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
வீரவில விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்த வெல்லவாய பிரதேசத்தில் வசிக்கும் சிப்பாய் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.33 மணியளவில் குறித்த புகையிரதம் களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்ததாகவும், வேன் கடற்கரையிலிருந்து காலி வீதி நோக்கி புகையிரத கடவை ஊடாக திருப்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த புகையிரத கடவையில் பாதுகாப்பு கடவை இல்லை, ஆனால் ரயில்வே வண்ண சமிக்ஞை அமைப்பு செயல்பாட்டில் உள்ளது.
விபத்தின் போது வண்ண சமிக்ஞை அமைப்பு செயற்பாட்டில் இருந்த போதும் வேன் கவனக்குறைவாக புகையிரத கடவையை நோக்கி செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.