வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு சென்ற பெண்ணிடம் கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இன்று, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி அதிகாலை, வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக, பெண் ஒருவர் தனது குழந்தையுடன், மோட்டார் சைக்கிளில், கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு சென்றார்.
இதன் போது, வீதியில் முகத்தை மூடி துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள், குறித்த பெண்ணை வழிமறித்து, குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பெண் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், குறித்த பெண்ணின் மோட்டர் சைக்கிளையும் பறித்துச் சென்றனர்.
சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார்.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய, சிதம்பரபுரத்தை சேர்ந்த 35 வயதான இளைஞர், மதவுவைத்தகுளத்தை சேர்ந்த 35 வயதான இளைஞர், சிறிராமபுரத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபகரிக்கப்பட்ட மூன்றரைப் பவுண் நகைகள் உருக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள நகைகடை ஒன்றில் இருந்து, பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
பறித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள், கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டு பென்ரன் மற்றும் லப்டொப் என்பனவும், குறித்த மூவரிடம் இருந்து மேலதிகமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இவை, கனகராயன்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து திருடப்பட்டவை என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.