தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லவுள்ளோருக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22.08.2022 முதல் 26.08.2022 வரை இதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு கடவுச்சீட்டு கட்டாயம் என்பதுடன், குடிவரவுத் திணைக்களத்தின் அனுமதியுடன் இதுவரையில் அதனைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் விசேட முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பணியகத்தின் மாகாண அலுவலகங்கள் 2022 ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகள் அத்தகைய வேலை தேடுபவர்களுக்கு பொருத்தமான பரிந்துரை கடிதங்களை வழங்கும்.
இந்தப் பரிந்துரைக் கடிதங்களைப் பெற, தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்படும் பணத்தினை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சிபாரிசு கடிதத்தை சமர்ப்பித்து ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏற்கனவே கடவுச்சீட்டு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தாது மேலும் அவர்கள் தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்ப படிவத்தை ஸ்கேன் செய்து அனுப்புவதன் மூலம் இணைய முறையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களை www.slbfe.lk என்ற பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.