ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பில் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை வழங்கும் போது அரசாங்கம் தேசிய சொத்துக்களை விற்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கொழும்பு – ஹில்டன் ஹோட்டலில் முதலீடு செய்வதற்கு 4 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் அரசாங்கம் எதிர்பார்க்கும் முதலீடு அமையாவிட்டால் ஹில்டன் ஹோட்டலை விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
நாட்டின் கடன் சுமைகளைக் குறைத்து திறைசேரிக்கு பலமாக அமையும் வகையில் இவற்றை விற்பதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அதனைவிடுத்து யாருக்காவது விற்று இலாபமீட்டுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பல்ல.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் கடன்களை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளது.
எனவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான காலம் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கம் இந்நிறுவனத்தின் கடன்களைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதால் முதலீட்டாளர்களுக்கு கடன் சுமை இருக்காது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை மறுசீரமைப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கடனை செலுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. எமிரேட்ஸ் விமான சேவை மீண்டும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது என்றார்.