28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

100 நாட்களை தொட்டு காசாவில் தொடர்ந்து தாக்குதல்: ‘நிறுத்துவதில்லை’ எனவும் உறுதி

காசாவில் போர் வெடித்து நேற்றுடன் 100 ஆவது நாளைத் தொட்ட நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு யாராளும் எம்மை நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.

இந்தப் போர் பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதோடு, காசாவில் உயிரிழப்பு 24,000 ஐ நெருங்க, அந்த குறுகிய நிலத்தின் பெரும் பகுதி இஸ்ரேலிய குண்டு மழையால் சின்னாபின்னமாகியுள்ளது. இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவும் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணை ஹேகில் உள்ள சர்வதேச நிதிமன்றத்தில் இடம்பெறும் நிலையில், “எந்த ஒரு நீதிமன்றம் அல்லது இராணுவ எதிரிகளாலும் ஹமாஸை ஒழிக்கும் இஸ்ரேலின் இலக்கை நிறுத்த முடியாது” என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

“யாராலும் எம்மை நிறுத்த முடியாது ஹோகாலும், தீய எதிரிகளாலும் மற்றும் வேறு எவராலும் எம்மை நிறுத்த முடியாது” என்று சனிக்கிழமை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் நெதன்யாகு குறிப்பிட்டார். “வெற்றிவரை தொடர்வதற்கு சாத்தியம் இருப்பதோடு அவசியமாக உள்ளது. அதனை செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் மூன்று மாதங்களைத் தாண்டி நீடிக்கும் இந்தப் போர் நெதன்யாகுவுக்கு இஸ்ரேலுக்குள் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பலஸ்தீன போராளிகளின் பிடியில் தொடர்ந்தும் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாமல் போயிருப்பது அவர் மீதான எதிர்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவில் இடம்பெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

“பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை நாம் ஒவ்வொரு வாரமும் இங்கு தொடர்ந்து வருவோம்’ என்று பேரணியில் பங்கேற்ற 47 வயது எடன் பெகரானோ ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இந்தப் போர் வெடிப்பதற்கு காரணமான கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதிய இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்ட நிலையில், சுமார் 250 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதில் தொடர்ந்தும் 132 பேர் காசாவில் பணயக்கைதிகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் அவர்களில் குறைந்தது 25 பேர் போருக்கு மத்தியில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles