11 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமியின் மாமாவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொனராகலை தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தணமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 06 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுமியே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் பாடசாலை ஆசிரியை அண்மையில் பாடசாலையின் பாட வேளையில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வு வழங்கியுள்ளார்.
பின்னர் இந்த சிறுமி குறித்த ஆசிரியைக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த கடிதத்தில், சிறுமியின் உறவினரான 24 வயதுடைய மாமா சிறுமியை பல முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அதன வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருப்பதற்கு சிறுமிக்கு 100 ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஆசிரியை இது தொடர்பில் பாடசாலையின் அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் பாடசாலை அதிபர் இது தொடர்பில் தணமல்வில பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளார்.
தணமல்வில பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான 24 வயதுடைய சிறுமியின் மாமா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சிறுமியின் மாமா வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தணமல்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.