28 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்யுங்கள்  – ஐ.நா வில் இந்தியப் பிரதிநிதி 

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9) ஜெனிவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30 மணி) பேரவையின் தலைவர் ஓமர் நிபர் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர். அதன்படி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி, போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் இலங்கையில் புனர்வாழ்வளித்தல், மீள்குடியேற்றல் மற்றும் நாட்டை மீளக்கட்டியெழுப்பல் ஆகியவற்றுக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியதாகவும், 2022 ஆம் ஆண்டு நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் பொருளாதார மீட்சி மற்றும் கடன்மறுசீரமைப்பு செயன்முறை ஆகியவற்றுக்கும் இந்திய அரசாங்கம் மிகையான உதவிகளை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.  

அதேபோன்று இலங்கையுடனான உறவைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கான சமத்துவம், நீதி, சமாதானம் ஆகியவற்றுக்கும், மறுபுறம் இலங்கையின் இறையாண்மை, சுயாதீனத்துவம் ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளித்துவருவதாகக் குறிப்பிட்ட இந்தியப் பிரதிநிதி;, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தி மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் அதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலும் அதற்குப் பங்களிப்புச்செய்யும் என நம்பிக்கை வெளியிட்டார். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles