ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தப் பரிசோதனை முறை மூலம் பீ.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என்று சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.
இதன்படி, உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சம் வைரஸ் பரிசோதனைக் கட்டமைப்புக்களை கொரியாவில் இருந்து தருவித்திருப்பதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.
அடுத்த வாரம் இவ்வாறான எட்டு இலட்சம் பரிசோதனைக் கருவிகளை தருவிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்த அவர், முதலில் தருவிக்கப்படும் இந்த கருவிகள் மூலம் முதலீட்டுச் சபையிலும் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தொழிற்சாலையிலும் பணிபுரியும் சுமார் 8 இலட்சம் ஊழியர்கள் பரிசோதிக்கப்படவுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.