4 வருடங்களில் முடங்கிய வர்த்தகம் – வெளியான விசேட தகவல்

0
102

நாட்டில் கடந்த 2018 – 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா நோய்த்தொற்று காரண மாக, 02 இலட்சத்து 63 ஆயிரம் நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இயங்கிய நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டாகும்போது 2,54,000 நுண் நிறுவனங்களும் 6,900 சிறிய நிறுவனங்களும் 1,100 நடுத்தர நிறுவனங்களும் மூடப்பட் டுள்ளதாக அந்தத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரியதர்ஷன தர்மவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

2018ஆம் ஆண்டு செயற்பாட்டிலிருந்த நிறுவனங்களில், தனிநபர்களினால் முன்னெடுக் கப்பட்டு வந்த 02 இலட்சத்து 63 ஆயிரம் வரையிலான செயற்பாடுகள் 2022ஆம் ஆண்டாகும்போது மூடப்பட்டுள்ளமை ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் பணியாளர்களின் எண்ணிக் கையின் அடிப்படையிலேயே நுண், சிறிய மற்றும் நடுத்தரளவிலான வியாபாரங்கள் தீர்மானிக்கப் படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், 2018ஆம் ஆண்டு சிறியளவான வர்த்தகங்கள் 2019ஆம் ஆண்டு நுண் வர்த்தக துறைகளாக மாறின. 2018ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இயங்கிய நிறுவனங்களில் நுண் துறைகளாக இருந்த நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டாகும்போது 02 இலட்சத்து 54 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று, சிறியளவாக இருந்த நிறுவனங்கள் 6,900 வரையில் மூடப்பட்டுள்ளன. இருந்தபோதும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் 1,100 வரையில் மூடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் கணக்கெடுக்கப்படவில்லை. இந்த தொகையில் நிலையாக மூடப்பட்ட நிறுவனங்களும் இருக்கின்றன. தற்காலிகமாக மூடப்பட்ட நிறுவனங்களும் இருக்கின்றன. இவ்வாறு மூடப்பட்ட மொத்த நிறுவனங்களில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் வரையிலான நிறுவனங்கள் நிலையாக மூடப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதேபோன்று 56 ஆயிரத்து 600 வரையிலான நிறுவனங்கள தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நிறுவன உரிமையாளர்களின் பால்நிலை வேறுபாட்டின் அடிப்படையிலேயே இந்த கணக்கொடுப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய, 1.3 மில்லியன் வரையிலான வர்த்தக நிறுவனங்களில் ஒரு மில்லியன் 12 இலட்சத்து 90 ஆயிரம் வரையிலான நிறுவனங்களிலேயே ஆண், பெண் பால்நிலை வேறுபாட்டை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. நிலையாக மூடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஒரு இலட்சத்து 69 ஆயிரம் நிறுவனங்களை ஆண்கள் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். 27 ஆயிரத்து 600 நிறுவனங்கள் பெண்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. தற்காலிகமாக மூடப்பட்ட நிறுவனங்களை எடுத்துக்கொண்டால் 44 ஆயிரத்து 800 வரையான நிறுவனங்கள் ஆண்களினாலும் 11 ஆயிரத்து 700 வரையிலான நிறுவனங்கள் பெண்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இவ்வாறு வர்த்தக நிலையங்கள் மூடப் பட்டமைக்கான காரணம் தொடர்பில் முன்னெ டுக்கப்பட்ட ஆய்வுகளில், பொருளாதார நெருக் கடியினால் 41 சதவீதமானவர்கள் வர்த்தக நிலையங் களை மூடியுள்ளனர். கொரோனா நிலைமையினால் 45 சதவீதமான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் முன்னெடுக் கப்பட்ட ஆய்வுகளில் மேற்குறிப்பிட்ட மூன்று துறைகளிலும் 75 சதவீதமான நுண் நிறுவனங் களும் 77 சதவீதமான சிறிய நிறுவனங்களும் 73 சதவீதமான நடுத்தர நிறுவனங்களும் தமது வர்த்தக செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

நடுத்தர நிறுவனங்களில் 20.7 சதவீதமானவர்கள் தமது வர்த்தகத்தை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். அதற்கமைய, சிறியள வான வர்த்தக நிறுவனங்கள் 12.8 சதவீதமும் நுண் வர்த்தக நிறுவனங்கள் 11.4 சதவீதமும் வர்த்தகத்தை விஸ்தரிக்கும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.

ஆனால், 2.9 சதவீத நுண் வர்த்தன நிறுவனங்களும் 1.3 சிறிய வர்த்தக நிறுவனங்களும் 0.6 வரையிலான நடுத்தர

நிறுவனங்களும் எதிர்காலத்தில் வர்த்தக நிறுவனங்களை மூடும் நிலைப்பாட்டில் இருக்கின்றன. அதேபோன்று, கடனிலிருந்து மீள்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முடிந்தளவு கடனை பெற்றுக்கொண்ட நிறுவனங்களின் மூலம் கடனை மறுசீரமைப்பு செய்துகொள்ள முயற்சித்துள்ளன. நடுத்தர நிறுவனங்களில் 91 சதவீதமான நிறுவனங்கள் அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன்களை பெற்றுகொண்டிருக்கிறார்கள். நுண் நிறுவனங்கள் 40 சதவீதமானவை வேறு நிறுவனங்களினூடாக கடன் பெற்றுக்கொண்டுள்ளன. 19 சதவீதமான நிறுவனங்கள் வட்டிக் கடனை பெற்றுக்கொண்டுள்ளன.

நடுத்தர நிறுவனங்களில் அண்ணளவாக 50 சதவீதமானவையும் நுண் நிறுவனங்களில் 27 நிறுவனங்களும் வர்த்தக செயற்பாடுகளை வரையறுத்து கடனிலிருந்து மீள்வதற்கு முயற்சித்துள்ளன. நுண் நிறுவனங்களில் 9.2 சதவீதமானவை கடனிலிருந்து மீள்வதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை என்று அறிவித்திருக்கின்றன.