இலங்கை குறித்து உலக வங்கி கவலை!

0
156

இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, வரிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்க கடந்த காலங்களில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்றுவரை, இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்டுள்ளன.
இந்த வளங்கள் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் நம்பிக்கைக்குரிய மேற்பார்வையை நிறுவுவதற்கு, அதனை செயல்படுத்தும் முகவர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
இதனை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்போம். இலங்கை மக்களுக்கு எங்களுடைய ஆதரவினை அதிகரிக்க மற்ற அபிவிருத்தி பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறோம்.
போதுமான பேரின பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க திட்டமிடவில்லை.
இதற்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்ட ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.
மேலும் இந்த நெருக்கடியை உருவாக்கிய அடிப்படை கட்டமைப்பு காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் எதிர்கால மீட்சி மற்றும் அபிவிருத்தி மீள்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.