களைகொல்லி  கிளைபோசேட் இறக்குமதிக்கு  அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி!

0
119

பெருந்தோட்டத்துறையில் களைகொல்லியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் இறக்குமதி செய்வது தொடர்பில் 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய இந்த ஒழுங்குவிதிகள் அடங்கிய 2291.44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயகத்தின் பரிந்துரையின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் குழு கூடிய போது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கு விதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டாலும்,அது நிபந்தனைக்கு உட்பட்டதாக அமையும். இதற்கு முன்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் பரிந்துரைக்கு அமைய இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்கள் தொடர்பில் இந்த கிளைபோசெட் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை அடுத்து தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்திய பின்னர் எதிர்கால தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

 அத்துடன் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ள சட்டமூலங்கள் மற்றும் ஏனைய துணைச் சட்டங்கள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு முற்கூட்டியயே வழங்கப்பட வேண்டும் என்றும்,அவை குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

பெருந்தோட்டத்துறையில் களை கொல்லியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசெட் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சுகாதார தாக்கங்களைக் கருத்திற்கொண்டு கிளைபோசெட் இறக்குமதி தடை செய்யப்பட்டாலும் தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதிக்கு காணப்படும் தடைகள் மற்றும் வெலிகம தென்னோலைகள் பாதிக்கப்படும் நோயை ஒழிப்பது போன்ற காரணங்களாக வரையறுக்கப்பட்;ட வகையில் கிளைபோசெட் இறக்குமதி செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் ஏற்படக் கூடிய சுகாதார மற்றும் சூழலியல் தாக்கங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்களும்,அதிகாரிகளும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

அதற்கமைய இது தொடர்பில் எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடலை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கும் அவசியம் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.