உலகளாவிய வர்த்தகத்தை நிர்ணயிக்கும் சக்தியாக திகழும் கடல் வழி வாணிபம் குறித்த சூழ்ச்சி அரசியலையும், அது தொடர்பான குற்றப் பின்னணியையும் கதைக்களமாக கொண்டு ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
‘பூலோகம்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘அகிலன்’. இதில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன், சிரக் ஜானி, தருண் அரோரா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
ஸீ ட்ராஃபிக் எனும் கடல் வழி கடத்தலை மையப்படுத்தி எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் :அகிலன்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் பங்குபற்றினர்.
இதன் போது படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் பேசுகையில், ” சென்னை துறைமுகத்தை சார்ந்து வட சென்னையில் ஏராளமான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டிருக்கின்றன.
இவர்களில் ஒருவராக அகிலன் இருக்கிறார். நல்லவரா? கெட்டவரா? என இனம் கண்டறிய இயலாத கதாபாத்திரத்தில் தன்னுடைய தோற்றத்தை மண்ணின் மைந்தர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டு ஜெயம் ரவி அகிலனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.
குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். கடலில் பயணிக்கும் கப்பலில் நடைபெறும் சரக்கு போக்குவரத்து.. எப்படி சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும், ‘ஸீ டிராஃபிக்’ எனப்படும் கடல் வழி குற்ற சம்பவங்கள் குறித்தும் விரிவாக பேசியிருக்கிறோம்.
இது தொடர்பான முழுமையான புரிதலை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என நம்புகிறோம். இது தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இந்தப் படத்தில் வசனங்களை விட விசுவல் டிராமா எனும் காட்சி வழி திரைக்கதை உயிர்ப்புள்ளதாக இருக்கும். இதற்கு சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது. ” என்றார்.