இலங்கைப் பெண்களை வலுவூட்டும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வுமன் பிளஸ் பஜார் 2023’ கண்காட்சி நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் ஆரம்பமானது.
கொழும்பில் உள்ள எகிப்து அரபுக் குடியரசு தூதரகம், கொழும்பு மாநகர சபை மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.
உள்ளூர் கைவினைப் பொருட்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் 200இற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்களைக் கொண்டிருந்ததோடு, பெண் தொழில்முனைவோருக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் அதிக பங்களிப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும்.
கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி, உற்பத்தியாளர்களுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக காலி பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிப்பதற்குப் பொருத்தமான இடமொன்றை தேடித் தருமாறு பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவிடம், ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் சம்பத் அர்ஹபொல, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், எகிப்து அரபுக் குடியரசு தூதுவர் மஹீட் மொஸ்லோ, ஜக்கிய லக் வனிதா முன்னணியின் தலைவி சாந்தினி கொங்கஹகே மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.