மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை போராட்டம் 60வது நாளாக முன்னெடுப்பு

0
204

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை அறவழிப் போராட்டம், கொட்டும் மழைக்கு மத்தியிலும் 60வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
சித்தாண்டியில் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில், தங்களுக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம்
இடம்பெறும் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தங்களது உறுதிப்படுத்திய வசிப்பதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
நீதி மன்ற கட்டளையை மதித்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா என்ற சந்தேகம் உள்ளதாகவும், இதேபோல் கடந்த காலத்தில் கொழும்பு உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இதேபோன்றதொரு உயர் நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பித்தும் அவர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறவில்லை என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே நீதி மன்ற கட்டளையை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறியமைக்கான உறுதியான விடயங்கள் இடம்பெறும் போதும், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தும் போது நாங்கள் எங்களது போராட்ட நிறுத்தம் தொடர்பாக யோசிப்பதாக தெரிவித்தனர்.