புத்தளம் – மஹகும்புக்கடவல பகுதியில் உள்ள மோகரிய குளத்திலிருந்து மீனவர் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹகும்புக்கடவலையைச் சேர்ந்த தசாநாயக்க முதியன்சேலாகே சுனில் தசாநாயக்க (வயது 51) எனும் திருமணமாகாத நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குளத்தில் வலையைக் கட்டி மீன் பிடிக்கும் தொழிலை இடைக்கிடையே மேற்கொண்டு வரும் குறித்த மீனவர், 27 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மஹகும்புக்கடவல மோகரிய குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் சம்பவ இடத்தில் மரண விசாரணையை மேற்கொண்டார்.
அத்துடன், குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நபரின் முகப் பகுதி சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும், கபரகொயா எனும் நீர் உடும்பு (Asian water monitor ) குறித்த மீனவரின் முகப் பகுதியை சாப்பிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் கூறினார்.
எவ்வாறாயினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணத்தை அறிய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மஹகும்புக்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.