சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட முப்பத்தாயிரத்து ஐந்நூற்று நாற்பத்து மூன்று பொதிகள் பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் மற்றும் ஜெல் பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேல்மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு, வாழைத்தோட்டத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர், பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகள் மற்றும் ஜெல் போன்றவற்றை இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கொண்டு வந்து மருந்தகங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்வதை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில், மேல் மாகாண ஊழல் தடுப்புப் பிரிவு நிலைய கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று (02) சட்டவிரோதமாக மாத்திரைகளைக் கொண்டு வந்த சந்தேகநபரின் வீட்டைச் சோதனையிட்டனர்.
அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏழு வகையான பாலுணர்வை தூண்டும் மருந்துகளின் முப்பத்தாயிரத்து முந்நூற்று நாற்பது மாத்திரைகளும், இரண்டு வகையான பாலுணர்வை தூண்டும் ஜெல்களின் இருநூற்று மூன்று பொட்டலங்களும் இங்கு கண்டெடுக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்று கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது