27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வரி அறவீடு உள்ளிட்ட மறுசீரமைப்புக்கள் இன்றேல் நாமும் லெபனான் ஆர்ஜென்டீனாவின் நிலையை அடைவோம் – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டுமக்கள் தற்போது மிகக்கடினமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருப்பதனால், வரி அறவீடுகள் உள்ளிட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் யாராலும் விமர்சனங்களை முன்வைக்கமுடியும். ஆனால் இம்மறுசீரமைப்புக்களை மேற்கொண்டிருக்காவிடின், நாம் எந்த நிலையில் இருப்போம் என்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை. பொருளாதார நெருக்கடியை அடுத்து உடனடி மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தியிருக்காவிடின் நாம் லெபனான், ஆர்ஜென்டீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலையைத்தான் அடைந்திருப்போம். ஆனால் இவ்வாறான மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்த ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறுகிய காலத்தில் அதிலிருந்து விரைவாக மீண்ட ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமே என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு முதல் அமுலுக்குவரும் பெறுமதிசேர் வரி (வற்வரி) விதிப்பு உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இம்மறுசீரமைப்புக்கள் பற்றியும், நாம் பயணிக்கவேண்டிய பாதை குறித்தும் தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அதில் அவர் மேலும் கூறியதாவது,

எமது நாடு கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னொருபோதுமில்லாத வகையிலான மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. குறிப்பாக பொருளாதாரம் 8 சதவீதத்தினால் சுருக்கமடைந்ததுடன் பணவீக்கம் சடுதியாக பெருமளவால் அதிகரித்தது. வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு வீழ்ச்சியடைந்ததுடன் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை இடைநிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டுசெல்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்விளைவாக பணவீக்கம் குறைக்கப்பட்டமை, வெளிநாட்டுக்கையிருப்பு மட்டம் உயர்வடைந்தமை உள்ளிட்ட பிரதிபலன்களை அடைந்துகொள்ளமுடிந்ததுடன் பொருளாதாரம் மீண்டும் சரியான பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கள் மிகக்கடினமானவையாக இருப்பினும், அவற்றைத் தொடர்ந்து சீராக முன்னெடுத்துச்செல்வதன் மூலம் இவ்வாண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துகொள்ளமுடியும். குறிப்பாக 2024 இல் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும், பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்தில் பேணுவதற்கும், ஏற்றுமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் எதிர்பார்த்திருக்கின்றோம்.

தற்போதைய சூழ்நிலை மிகவும் கடினமானதாக இருப்பதனால், அதுகுறித்து யாராலும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கமுடியும். ஆனால் நாம் முன்னெடுத்திருக்கும் மறுசீரமைப்புக்களையும், கடினமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்காவிடின், நாம் எந்த நிலையில் இருப்போம் என்பது பற்றி பொதுமக்கள் சிந்திப்பதில்லை. உண்மையில் நாம் உடனடி மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தியிருக்காவிடின் லெபனான், ஆர்ஜென்டீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் நிலையைத்தான் அடைந்திருப்போம். இவ்வாறான மிகமோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறுகிய காலத்தில் அதிலிருந்து விரைவாக மீண்ட ஒரேயொரு நாடு இலங்கை தான்.

அடுத்ததாக நாம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களுக்கான கடன்மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தினோமே தவிர, நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக அறிவிக்கவில்லை. வங்குரோத்துநிலை என்பது கடன்களை மீண்டும் எப்போதும் செலுத்தப்போவதில்லை எனும் நிலையாகும். அவ்வாறான சூழ்நிலையில் யாரும் எமக்கு கடன்வழங்க முன்வரமாட்டார்கள். ஆனால் நாம் கடன்மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்தியதன் மூலம் கடன்மறுசீரமைப்பின் ஊடாக கடன்களை மீளச்செலுத்துவதற்குரிய காலப்பகுதியை நீடிக்குமாறு கோரினோம். அதுமாத்திரமன்றி அவ்வேளையில் (2022 ஏப்ரலில்) எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம். 2022 ஏப்ரல் – ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் காணப்பட்டதை ஒத்த நிலை தொடர்ந்திருந்தால், நாட்டின் பொருளாதாரம் முற்றாக சீர்குலைந்திருக்கும். ஆனால் நாம் ஒப்பீட்டளவில் விரைவாக மீட்சியடைந்து சரியான திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

அதேபோன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக கடன்மறுசீரமைப்பு செயன்முறையிலும் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் ‘பாரிஸ் கிளப்’ நாடுகள் கடன்மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. மறுபுறம் வர்த்தகக் கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை இவ்வருடத்தில் எட்டமுடியுமெனக் கருதுகின்றோம். எனவே கடன் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு இன்னும் சொற்பளவிலான நடவடிக்கைகளையே முன்னெடுக்கவேண்டியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது முன்னெடுக்கப்படும் சகல மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் அனைவருக்கும் இடையே சமனாகப் பகிர்ந்துகொள்வதன் மூலமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளமுடியும். குறிப்பாக நாட்டின் சகல பிரஜைகளும் தமக்குரிய வரியை சரியாகச் செலுத்துவதுடன், தாம் அறிந்த எவரேனும் வரி செலுத்தாதிருந்தால் அதுகுறித்து தகவல் வழங்கவேண்டும். நாம் கீழ்நோக்கி இலகுவாகப் பயணிக்கலாம். ஆனால் அதிலிருந்து மீண்டும் மேல்நோக்கிப் பயணிப்பதென்பது கடினமானதாகும். அதனைப் படிப்படியாகத்தான் செய்யமுடியும். இப்போது நாம் சரியான திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். இதில் சிறிய மாற்றங்களை மேற்கொள்ளலாம். ஆனால் பயணத்தின் திசையை மாற்றினால் மீண்டும் மிகமோசமான நெருக்கடிக்குள் விழுந்துவிடுவோம் என்பதை மனதிலிருத்திச் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தினார். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles