அம்பாறை திருக்கோவிலில் மரதன் ஓட்டத்தில், பங்கேற்ற மாணவன்-மயங்கி வீழ்ந்த நிலையில், உயிரிழப்பு

0
139

அம்பாறை திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனொருவர், இன்றைய தினம், மரதன் ஓட்ட நிகழ்வில் கலந்துகொண்ட போது, மயக்கமுற்று,
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன் என்ற மாணவனே உயிரிழந்தவர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று காலை மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன், திடீரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு மாணவன் உயிரிழந்துள்ளதாக
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனிற்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை என
குற்றஞ்சாட்டியிருந்தனர்.
திருக்கோவில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகள், இராணுவத்தினர், திருக்கோவில் பிரதேச செயலாளர், வலயக் கல்வி அலுவலக பணிப்பாளர்,
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலை அதிபர், மாணவர்களுடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து
கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை குழு ஒன்றினை அமைத்து விரைவாக சட்ட ரீதியான தீர்வுகளைப் பெற்று தருவதுதாகவும் தெரிவித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது.
இதேவேளை மரணமடைந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்
டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தெரிவித்துள்ளார்.