இடது குதிகால் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இலங்கை சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
இம்முறை ஐ.பி.எல். தொடரில் ஹசரங்கவை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி இந்திய ரூபா 1.5 கோடிக்கு வாங்கியபோதம் அது 2022 ஆம் ஆண்டு அவரை றோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணி இந்திய ரூபா 10.75 கோடிக்கு வாங்கியதை விடவும் மிகக் குறைவான தொகையாகும்.
“பாத மருத்துவரை சந்தித்த பின் குணமடைவதற்கு மேலும் காலம் எடுத்துக் கொள்ளும் என்று தெரியவந்ததை அடுத்து அவர் ஐ.பி.எல். இல் பங்கேற்க மாட்டார்” என்று இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹசரங்க டுபாய் சென்று மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெற இருப்பதாக தெரியவருகிறது.
“குதிகாலில் ஒரு வீக்கம் உள்ளது. அவர் ஊசி போட்டே விளையாடுகிறார். எனவே, உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர் தீர்மானித்திருப்பதோடு இந்த ஆண்டு ஐ.பி.எல். இல் இருந்து விலகுவதாக அவர் எமக்கு அறிவித்துள்ளார்” என்று டி சில்வா மேலும் தெரிவித்தார். டி20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.