ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் 2024 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இந்தியாவின் முன்னணி பால் நிறுவனமான அமுல் நிறுவனத்தை நியமித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அனுசரணை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் காலத்திற்குரியதாகும். ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் அமுல் இணைந்திருப்பது ஒரு சிறந்த நகர்வாகும். சர்வதேச விளையாட்டுத்துறை ப்ராண்ட் ஒன்று எம்முடன் கைகோர்த்திருப்பதன் மூலம் அந்த நிறுவனத்தின் சந்தை வாய்ப்பை வளர்ச்சி அடையச் செய்கிறது. அத்துடன் சர்வதேச பார்வையாளர்கள் அந்த ப்ராண்டை பெருமளவில் பார்க்கக்கூடியதாகவும் இருக்கும்’ என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.
‘பால்வள அபிவிருத்தியில் அமுல் ஒரு நிரூபிக்கப்பட்ட முன்மாதிரியாகும். சிறிய மற்றும் பரந்த விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு இலங்கையுடன் அமுல் இணைவது பெருமை தருகிறது. 2023 ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அண்மையில் நடைபெற்றபோது இலங்கை அணியுடன் அமுல் இணைந்திருந்தது. அந்த இணைப்பை இலங்கை அணியுடன் மேலும் பலப்படுத்தக் கிடைத்ததையிட்டு நாங்கள் பெருமை அடைகிறோம்’ என அமுல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெயன் மெஹ்தா தெரிவித்தார்.
நியூ யோர்க்கில் எதிர்வரும் ஜுன் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள தென் ஆபிரிக்காவுடனான போட்டியுடன் இலங்கை தனது ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது. ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜுன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.