நமது மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் எழுப்பியுள்ள கேள்வி பலரின் கவனத்தைப் பெற்றிருப்பதை உணர முடிகின்றது. அவர் எழுப்பியுள்ள கேள்வி இதுதான்: ‘மறைந்த மூத்த தமிழ் அரசி யல்வாதி சம்பந்தன் ஒரு தோல்வி யடைந்த அரசியல்வாதி என்று பலர் எழுதுகிறார்கள். இதுவரை வெற்றி பெற்ற தமிழ் அரசியல்வாதி யார்?’.
இதுவே, அவர் எழுப்பியுள்ள கேள்வி. இந்தக் கேள்வியில் ஒரு விடயம் மறைமுகமாக தொக்கி நிற்கிறது. அதாவது அவருக்கும்கூட, சம்பந்தன் தோல்வியடைந்த அரசியல்வாதிதான் என்பதை நிரா கரிக்க முடியவில்லை.
சம்பந்தன் பற்றிய அந்தக் குறிப்பை படித்ததும்தான் சில விடயங்கள் ஞாபகத்துக்கு வந்தன. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் திருமலையில் நடைபெற்றபோது நடந்த பல விடயங்களை அறிந்தி ருந்தபோதிலும், அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள சந்தர்ப் பம் கிடைக்கவில்லை. அவருக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அஞ்சலி பற்றி எழுதியபோது ஆய்வாளர் நிலாந்தன், ‘தோற் றுப்போன தலைவர்’ என்றுதான் எழுதியிருந்தார்.
இவ்வாறு எழுத அவரைத் தூண்டியதே, அவரின் இழப்பு தமிழ் மக்களைப் பாதிக்க வில்லை என்பதுதான். ஒரு தலை வரின் இழப்பு – அந்தத் தலைவரை தமது அரசியல் தலைவராக இதுவரை வைத்திருந்த மக்களையே பாதிக்கவில்லை என்றால் அந்தத் தலைவர் தோற்றுவிட்டார் என்பதுதான். இந்தத் தோல்வி யிலிருந்தே அவரின் அரசியல் வாழ்க்கையை எடை போடவேண் டியிருக்கின்றது. சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் திருகோணமலையிலுள்ள அவரின் சொந்த வீட்டில் நடைபெற்றன.
கிரியைகள், அஞ்சலி நிகழ்வுகள் அனைத்தையும் அவரின் குடும் பத்தினரே முன்னின்று நடத்தினார் கள். அஞ்சலி உரைகள் ஆற்றுவதற் காக மேடை ஒன்று போடப்பட்டி ருந்தது. நிகழ்ச்சிகளை கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் சம்பந்தனின் நெருங்கிய அரசியல் சகாவுமான தண்டாயுதபாணியே தலைமை தாங்கி நடத்தினார்.
அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை தன்னிடமே தருமாறு சம்பந்தனால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட சுமந்திரன் விரும்பியபோதிலும் திருகோண மலையில் சம்பந்தனோடு அரசிய லில் பயணித்தவர்கள் அதற்கு விரும்பவில்லை என்றும் தண்டாயுத பாணியே அதற்கு தலைமை தாங்க வேண்டும் எனவும் பிடிவாதமாக மறுத்துவிட்டனர் என்றும் அறிய முடிந்தது.
பின்னர் கொழும்பி லிருந்து வருகின்ற தலைவர்களை யாவது பேசுவதற்கு அழைப்பதற்கு தனக்கு சந்தர்ப்பம் தரவேண்டும் என்று சுமந்திரன் விடுத்த கோரிக் கையை அவர்கள் ஏற்றுக்கொண்ட னராம். அன்றைய நிகழ்வுகளில் சம்பந் தன் குடும்பத்தினர் விடுத்த ஒரே ‘உத்தரவு’ , ஒருவர் மேடைக்கு வரக் கூடாது என்பதுதான். அந்த ஒருவ ரும் – சம்பந்தனால் வலிந்து அரசிய லுக்கு கொண்டுவரப்பட்டு அவர் மறைவின் பின்னர் பாராளு மன்றம் செல்ல சந்தர்ப்பம் பெற்ற வர்தான். இனி இன்றைய விடயத்துக்கு வருவோம்:
வீரகத்தி தனபாலசிங்கத்தின் கேள்விக்கு வருவோம். இதுவரை வெற்றிபெற்ற தலைவர் யார்? இதுவே, அவரின் கேள்வி. வெற்றி என்று அவர் எதனைக் கருதுகிறார் என்பது தெரியவில்லை. தந்தை செல்வா தனது அரசியல் வாழ்க்கைக் காலத்தில் பல ஒப்பந் தங்களை சிங்களத் தலைவர்களுடன் செய்தார். அவை அவர் கோரிநின்ற சமஷ்டி கட்டமைப்பை அமைப்ப தற்கான ஒப்பந்தங்கள் அல்ல. அந்த நேரத்தில் சிங்கள ஆட்சியாளர்களிட மிருந்து அதி உச்சமாக பெறக்கூடி யது என்று அவர் நம்பியதை பெற ஒப்பந்தங்களை செய்தார்.
ஆனால், அவற்றை செய்த சிங்கள தலைவர் களே பின்னர் அவற்றை கிழித்து எறிந்தனர். அதாவது, செல்வா ஏமாற்றப்பட்டபோதும் தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப் போராட் டத்தை ஒரு போராட்டமாகவே வைத்திருந்தார்.
அதாவது, தமிழர் கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்றார்கள் என்பதை ‘போராட்டமாகவே’ அடுத்த சந்ததியிடம் விட்டுச்சென்றார். பின்னர் அந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கமும் அதி உச்ச கோரிக்கை என்னவாக இருந்தாலும் அவ்வப்போது கிடைக் கக்கூடியதை பெற்று தொடர்ந்து போராட வேண்டும் என்று நினைத் தார். அதனால்தான் மாவட்ட சபைகளையும் ஏற்றுக்கொண்டார். பின்னாளில் இந்திய உதவியுடன் மாகாண சபைகள் அமைக்கப்பட்ட போது, அதனையும் வடக்கு – கிழக்கு இணைந்த சபைகளாக பெறு வதில் கடைசிவரை போராடினார்.
ஆனால் சம்பந்தன், கடைசிவரை தான் நினைப்பதே நடக்கவேண்டும் அல்லது கிடைத்தால் அதிஉச்ச தீர்வாக சமஷ்டியே கிடைக்க வேண்டும், அது இல்லையென்றால் இடையில் எதனையும் தொட்டுக் கூடப் பார்க்கமாட்டேன் என்று அடம்பிடித்தார்.
அதிகம் ஏன், அவர் முதன்முத லில் அரசியலுக்கு வந்தது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனி நாட்டு கோரிக்கைக்கான ஆணை யைப் பெறுவதற்காக. ஆனால் அவரே, நாடு பிளவுபட்டுவிடக் கூடாது என்பதில் அக்கறையோடு இருந்தார் என்றும் அதனை அவர் தன்னிடமே கூறியிருக்கிறார் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரின் அஞ்சலி உரையின்போது கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது. ஆக, தேர்தல் வெற்றிக்காக தமிழீழ கோரிக்கையை முன்வைத் தோமே தவிர,
உண்மையில் நாங்கள் அதனை கோரவிலலை என்று சம்பந்தனே தெரிவித்திருக்கிறார். தலைவர் பிரபாகரன், தனது போராட்டத்தில் தோற்றாலும் தனது கோரிக்கைக்காகவே கடைசி வரை போராடினார். ஆனால் சம்பந்தன்? அதிகம் ஏன், தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு சென்றால், அது சிங்கள மக்களை ஆத்திரப்படுத்தும் என்று நினைத்து அங்கு செல்வ தையே தவிர்த்துக்கொண்டார்.
தனபாலசிங்கம் கேட்பதுபோல வெற்றி பெற்ற தலைவர்கள் இல்லா மல் இருக்கலாம். ஆனால், பல தலைவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் சம்பந்தன்போல தோற் றுப்போகவில்லை.!
– ஊர்க்குருவி