2027ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண உதைபந்து தொடருக்கான இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில் இலங்கை அணி இன்றைய தினம் கம்போடியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் கம்போடியாவின் ஒலிம்பிக் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
ஆசியக்கிண்ண தொடரின் ப்ளேஓவ் தகுதிகாண் ஆட்டத்தில் இலங்கை அணி கம்போடியாவுடன் இரு ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் முதல் ஆட்டம் இலங்கையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. கொழும்பு குதிரைப்பந்தைய திடல் மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது.
எட்டு ஆண்டுகளின் பின் இலங்கை அணி கம்போடியாவை எதிர்கொண்டதால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் மைதானத்தில் கூடியிருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோல்களின்றி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள ஆட்டம் இலங்கைக்கு ஆசியக்கிண்ணத்தின் பிரதான தகுதிச்சுற்றில் ஆட முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்-முத்தைரி செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்: சுஜான் பெரேரா, ஹர்ஷ பெர்னாண்டோ, மொஹமட் ஆகிப், மொஹமட் ஹஸ்மீர், மொஹமட் அமான், பாரத் சுரேஷ், வசீம் ரசீக், ஆதவன் ராஜமோகன், ஒலிவர் கெலாட், சகாய் ஸ்டீவன், லியோன் பெரேரா, வேட் டக்கர், ஜேசன் தயாபரன், ஜக் ஹிங்கர்ட், கிளாடியோ மத்தியஸ், ஷெனால் சன்தேஷ், சாமுவேல் டர்ரன்ட், வொரன் பெரேரா, அனுஜன் ராஜேந்திரன், பிராஸ் மர்ஷ_க், ஜூட் சுப்புன், மொஹமட் ரிப்கான், கவீஷ் பெர்னாண்டோ, மொஹமட் முர்சித், தனுக்க ரனவீர