அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் வாழ்த்து!

0
85

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கௌரவ. அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இவர் முகநூல் பக்கத்தில் தனது வாழ்த்தினை பகிர்ந்திருந்தார்.

‘எமது தேசமானது வரலாறு காணாத நெருக்கடி மிக்க காலப்பகுதியொன்றில் சிக்கித்தவிக்கும் இத்தருணத்தில் தங்களைச் சுற்றி அணி திரண்ட புதிய தலை முறையினர் பெரும் எதிர்பார்ப்புகளோடு பாரிய பொறுப்பினை தங்கள் மீது சுமத்தியுள்ளனர். அந்தவகையில் நமது தேசம் எதிர்கொண்டுள்ள சவால்களை கச்சிதமாகக் கையாண்டு முன்னேற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இந்நிலையை அடைவதற்காக தாங்களும் தங்கள் அரசியல் இயக்கத்தினரும் கடந்த காலங்களில் எல்லையற்ற அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றீர்கள். குறிப்பாக சமூகத்தின் விழிம்பு நிலையில் வாழும் பல்லாயிரம் ஏழை எளிய மக்களின் இளம் தலைமுறையினர். தமது உயிர்களைத் தானம் செய்துள்ளனர். எனவே ஒப்பற்ற இழப்புகளுடன் நீண்டதொரு காத்திருப்பின் பின்னருமே தாங்கள் இந்நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள்.

எனவே தங்களது கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரமானது என்றும் இன, மத, சமூக, பொருளாதார, பிரதேச, சாதி, பாலின ரீதியாகவும் மற்றும் இன்ன பிற வகைகளிலும் ஒடுக்கு முறைக்குள்ளாகும் வர்க்கங்களின் காவலனாக இருக்கும் என நான் பலமாக நம்புகின்றேன்.

எழுபதுகளின் முற்கூற்றிலும் எண்பதுகளின் பிற்கூற்றிலும் தென்னிலங்கை போன்ற விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென்பதற்காக இரண்டு முறை போராடிய வரலாற்றுப் பாதையை கடந்து வந்தவர்கள் நீங்களாகும். அதன் காரணமாக சிறுபாண்மை தேசிய இனமொன்றின் பெயரில் அதிகாரப் பகிர்வுக்காக போராடிய மக்களின் மன உணர்வுகளை நன்கே புரிந்து கொள்வதில் தங்களுக்கு எவ்வித தடையும் இருக்க முடியாது.

எனவே இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் அடிப்படையாகக் கொண்டு நடைமுறையில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க முன்வருவதோடு 13ஆவது சட்டதிருத்தம் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் பூரணமாக வழங்க முன் வருவீர்கள் என நான் பலமாக நம்புகிறேன்.

அவசியமேற்படின் அத்தகைய நிகழ்ச்சி நிரலொன்றின் கீழ் தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்னுடையதும் என் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளினதும் பூரண ஒத்துழைப்பினை வழங்க என்றும் தயாராக உள்ளேன். என்பதையும் தங்களின் மேலான கவனத்திற் கொண்டு வர விரும்புகிறேன்’

என தெரிவித்து தனது வாழ்த்தினை ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தார்.