மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் நேற்றுக் காலை, குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின், தோப்பூர் அலுவலகத்தில், பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் 54 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்தவராவர்.
உயிரிழந்தவரின் ஜனாசா மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தோப்பூர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் தாங்கியில், குளவிக் கூடுகள் காணப்படும் நிலையில், அதிலிருந்த குளவியே இவரைக் கொட்டியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.