இலங்கை – மியன்மார் அணிகள் மோதும் சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகள்

0
68

இலங்கை – மியன்மார் அணிகள் பங்கேற்கும் இரண்டு சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகள் மியன்மாரின் யங்கூன் நகரில் இன்று வியாழக்கிழமையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகள் சம்மேளனத்தினால் (FIFA) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சிநேகபூர்வ போட்டிகளின் ஒரு பகுதியாக இப் போட்டிகளை மியன்மார் கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பயின்ஷிப்பில் இலங்கையை சம்பியனாக்கும் குறிக்கோளுடன் இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

மியன்மாருக்கு எதிராக நடைபெறவுள்ள சிநேகபூர்வ சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக 23 வீரர்களைக் கொண்ட இலங்கை கால்பந்தாட்டக் குழாம் மியன்மார் சென்றடைந்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற AFC ஆசிய கிண்ண தகுதிகாண் சவூதி அரேபியா 2026 போட்டியில் கம்போடியாவை பெனல்டி முறையில் வெற்றிகொண்ட இலங்கை அணியில் முக்கிய பங்காற்றிய மூன்று பிரதான வீரர்கள் மியன்மாருக்கு எதிராக விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெக் ஹிங்கேர்ட், ஜேசன் தயாபரன், க்ளோடியோ மெத்தாயஸ் ஆகிய மூவருக்கும் ஓய்வு வழங்கி இளம் வீரர்களின் ஆற்றல்களைப் பரீட்சிக்கவுள்ளதாக இலங்கை அணி பயிற்றுநர் அப்துல்லா அல்முத்தய்ரி தெரிவித்தார்.

சர்வதேச தரவரிசையில் மியன்மாரை விட 33 இடங்கள் பின்னிலையில் 200ஆவது இடத்தில் இலங்கை இடம்பெறுகிறது. எனினும் புதிய வியூகங்களுடன் திறமையாக விளையாடிவரும் இலங்கை அணி இந்த சிநேகபூர்வ போட்டிகளில் மியன்மாரை வெற்றிகொள்வதற்கு முயற்சிக்கவுள்ளது. இலங்கை அணிக்கு தொடர்ந்தும் சுஜான் பெரெரா தலைவராக விளையாடவுள்ளார்.