இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையிலான
சிநேகபூர்வ சந்திப்பு இன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
புதிய ஆளுநருக்கு முதலில் வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயற்படவும், சுகாதாரம், கல்வி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறைகளின் அபிவிருத்திக்காக முதலீடுகளை மேற்கொள்ள நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களாக வாழும் கிழக்கு மாகாண மக்களின் தேவைகளை செவிமடுத்து, கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி குறுகியகால மற்றும் நீண்ட கால தீர்வைக் காண எதிர்பார்ப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் இச் சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவிக்கையில், பிரித்தானிய அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடனும், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்வாகத்தை மிகவும் பாராட்டுவதாகவும், அதற்கேற்ப, எதிர்காலத்தில் இலங்கை மற்றும் கிழக்கு மாகாண சபையுடனும் மிகவும் இணக்கமாக செயற்படவுள்ளதாக பிரித்தானிய தூதுவர் குறிப்பிட்டார்.