முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு ஒரு ‘விசேட செய்தி’யை வெளியிட்டார். அவர் செய்தியை வெளியிடவிருக்கிறாரென முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த காரணத்தால் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது என்னவோ உண்மைதான். ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு ஒரு மாதம் நிறைவடைவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக அவரின் அறிக்கை வந்திருக்கிறது. முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வி கண்ட வேட்பாளர் எவரும் இவ்வாறு நாட்டு மக்களுக்கு விசேட செய்தியை விடுத்தனரென நாம் அறியவில்லை.
தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை கர்ணகடூரமாக கண்டித்துப் பேசிய போதிலும் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அதே கொள்கைகளையே பின்பற்றுகிறாரென்றும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு விமர்சனங்களை செய்வது சுலபம் ஆனால், பதவியில் அமர்ந்த பிறகுதான் அவர் அரசாங்கத்தை நடத்துவதில் இருக்கக்கூடிய சிக்கல்களை புரிந்துகொள்ள தொடங்கியிருக்கிறார் எனவும் எவ்வளவு காலத்துக்கு அவரால் சமாளிக்க முடியும் என்றும் ஒரு மாதம் கடந்துவிடுவதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் பொரு ளாதார நெருக்கடியையும் அதன் விளைவான மக்கள் கிளர்ச்சியையும் சமாளிக்க முடியாமல் விக்கிரமசிங்கவின் உதவியை நாடியதுபோன்று மீண்டும் ஒரு சூழ்நிலை தோன்றலாம் என்றும் அவரின் சேவை மீண்டும் நாட்டுக்கு தேவைப்படும் எனவும் அவரைச் சார்ந்தவர்கள் பகிரங்கமாக பேசுகிறார்கள். விக்கிரமசிங்கவும் தனது செய்தியில் இன்னும் நான்கு வருடங்களில் வெளிநாட்டு கடன்களை திரும்பிச் செலுத்தத் தொடங் கும்போது அரச வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் பெரிய சவாலை எதிர்நோக்க வேண்டிவரப்போகிறது என்றும் அதனால் அடுத்த பாராளுமன்றத்தில் பொருளாதார பிரச்னையைக் கையாளக்கூடிய அனுபவமும் திறமையும் கொண்டவர்களும் பொறுப்பைத் தட்டிக்கழிக்காதவர்களும் இருப்பது அவசியம் என்றும் கூறியிருக்கிறார்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த இரு வருடங்களாக தன்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்களை மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யவேண்டும் என்பதே முன்னாள் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறிய ‘விசேட செய்தி’ என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. நிதித்துறை அதிகாரத்தைக் கொண்ட பாராளுமன்றம் உறுதியானதாக இருப்பதற்கு மக்கள் ‘எரிவாயு சிலிண்டர்’ சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று இறுதியில் விக்கிரமசிங்க வெளிப்படையாகவே வேண்டு கோள் விடுத்தார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது எந்தக் கட்சிக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்றும் கூறியிருக்கும் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தன்னை ஆதரித்தவர்களின் அணிக்கான முதல் பிரசார நடவடிக்கையாகவே இந்த அறிக்கையை வெளியிட்டார் அவ்வளவுதான். விசேடம் எதுவுமில்லை.