நண்பர் ஒருவர் முகநூலில் தான் படித்த ஒரு விடயத்தை அனுப்பியிருந்தார். அவர் ஊர்க் குருவியின் வாசகன் என்பதாலோ தெரியவில்லை, யாரோ ஒருவர் ஊர்க்குருவி பற்றி எழுதிய அந்தக் குறிப்பை அனுப்பியிருந்த போதிலும், அதனை யார் எழுதினார்கள் என்று குறிப்பிடவில்லை. நிச்சயம் அது ஒரு தமிழ் அரசு கட்சிக்காரரால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். நண்பர் எனக்கு அனுப்பி வைத்ததற்கும் காரணம் இருக்கலாம். முதலில் அவர் அனுப்பிய அந்தக் குறிப்பை அப்படியே தருகின்றேன்.
அதனை எழுதிய நண்பரும் ஊர்க்குருவின் வாசகர் என்பதால் இதனையும் அவர் படிப்பார் என்று நம்பு வோம். ‘தமிழரசை முடக்க வழக்குகள் வந்ததற்கு மாவையின் யாப்பு மீறல்களே காரணம் என்கிறது ‘ஈழநாடு’. இதற்கு முன் யார்யாரோ மீதெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதெல்லாம் அமைதியாக இருந்த ஈழநாடு, இப் போது ‘ஊர்குருவி’ மூலம் மாவையின் யாப்பு மீறல்கள் தான் காரணம் என உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறது. இதனை முன்பு சுமந்திரன் சொன்னபோது பலர் பொங்கினார்கள். இப்போது அவர்களில் பலர் கட்சியை விட்டு வெளியேறி கட்சிக்கு எதிராகவே போட்டியிடுகிறார்கள்.
பதினான்கு வருடங்களாக கட்சி தவறிழைத்து வருவதாக வேறு குற்றஞ்சாட்டுகிறார்கள் – வேட்பாளர் நியமனம் வரை கட்சிக்குள் இருந்தவர்கள். இனியாவது இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு வழக்கை முடிவுக்கு கொண்டு வர ஒத்துழைப்பார்களா? மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என நம்புவோம்.’ – நண்பர் அனுப்பி வைத்த குறிப்பு இதுதான். இதனை எழுதியவர், கடைசியாக ஊர்க்குருவி எழுதிய அந்தப் பத்தியைத்தான் படித்திருக்கிறார் என்று நினைக்க முடிகின்றது. மாவை யாப்புக்கு விரோதமாக பொதுச்சபைக்கு ஆட்களை நியமித்தமைதான் இத்தனை பிரச்னைக்கும் காரணம் என்பது அவர் சொல்வதுபோல சரியானதாவே இருக்கலாம். ஆனால், இந்தப் பிரச்னை தலையெடுத்த காலங்களில் ஊர்க்குருவி எழுதிய எதனையும் இவர் படிக்கவில்லை என்று தெரிகின்றது.
தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்சபைக்கு தொகுதிக் கிளைகளிலிருந்து பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றிருப்பதற்கு பதிலாக, பிரதேச சபைகள் மட்டத்தில் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டமைதான் பொதுச்சபையின் உறுப்பினர்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கக் காரணம். அதுவே, கட்சி நீதிமன்றம் செல்லக் காரணம். ஆனால், அப்படி தவறுதலாக பொதுச்சபைக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொண்டுதான் சுமந்திரனும் சிறிதரனும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான பிரசாரத்தை பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்டனர். சிறிதரன் அதனைத் தெரிந்து கொண்டு செய்தாரா என்பதற்கு அப்பால், நிச்சயமாக சுமந்திரன் தெரிந்து கொண்டுதான் தேர்தலை எதிர்கொண்டார்.
அதனால் தான், சிறிதரன் தெரிவுசெய்யப்பட்ட போதிலும் தலைவராக பதவியேற்க முடியாமல் இருந்தபோது, சிறிதரனுக்கு பகிரங்கமாக எழுதிய கடிதத்தில், ‘பொதுச்சபைக்கு பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்ட முறை கட்சி யாப்புக்கு விரோதமானது’, என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதிகம் ஏன், திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் அந்தக் கடிதம் பற்றி வழக்காளி குறிப்பிட்டிருந்தார். மாவை யாப்புக்கு முரணாக ஆட்களை நியமித்தமை பற்றி குறிப்பிட வேண்டி வந்தது, அவர் தனது இராஜிநாமா கடிதத்தை சிறிதரனுக்கு அனுப்பியது பற்றி எழுதுகின்றபோது இதனையும் உசாத்துணையாக சேர்க்கவேண்டி வந்ததே தவிர, அதுதான் வழக்கு பாய்வதற்கு காரணம் என்பதாலோ அல்லது அது குறித்தும் மாவை மீது குற்றம் சுமத்துவதற்காகவோ அல்ல. தமிழ் அரசுமீது வழக்கு வந்ததற்கு மாவையின் யாப்பு மீறல் காரணமாக இருந்தாலும் அது வந்த நேரமும் முறை மையும் திட்டமிடப்பட்டவை என்பதை யாரும் நிராகரிக்க மாட்டார்கள். அந்தத் தலைவர் தேர்தலில் சிறிதரன் வெற்றிபெறாமல், சுமந்திரன் வெற்றி பெற்றிருந்தால், இப்போதும் பொதுச் சபைக்கு தவறாக இணைக்கப்பட்டவர்கள் பொதுசபையில் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். அல்லது யாப்பு என்றாலும் மாற்றப்பட்டு பொதுச்சபையின் தற்போதைய உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டிருப்பார்கள்.
– ஊர்க்குருவி