2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நடைபெற்ற சம்பவம் ஒன்றுதான் இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது. அப்போது டான் ரீ. வி. அலு வலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊடக நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக அங்கு போயிருந்தேன். அங்கே தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் ஒரு குழுவின் தலைவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தார். புலம்பெயர் மண்ணிலிருந்து யுத்தம் முடிவடைந்த பின்னர் தாயகம் திரும்பி பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து கொண்டிருந்தவர் அவர். இங்குள்ள தமிழ் கட்சி ஒன்றில் போட்டியிடுவதற்கு முதலில் அவர் முயற்சி செய்துபார்த்தார். பின்னர் தேசியக் கட்சி ஒன்றிலும் முயன்று பார்த்துவிட்டு கடைசியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
அன்று தான், வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசிநாள். நண்பர் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த பின்னர், ஒரு பேச்சுக்காகக் கேட்டேன், ‘எப்படி தேர்தல்… உங்கள் வெற்றியில் நம்பிக்கையாக இருக்கின்றீர்களா?’ என்று. அவர் எந்தத் தயக்கமும் இன்றி சொன்னார்: ‘பத்து இடங்களையும் கைப்பற்றுவம்..’. எனக்கு துக்கிவாரிப் போட்டது. அப்போது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஏழு எம். பிக்களை தெரிவு செய்வதற்காகத்தான் தேர்தல் நடக்கின்றது. ஆனால், வேட்புமனுவில் பத்துப்பேரின் பெயர்களைப் போடவேண்டும் என்பதுதான் நான் அறிந்தது.
இவர் என்ன பத்து இடங்களிலும் தான் வெல்லுவேன் என்கிறார்? என்று எனக்குள் நினைத்தபோது, எதிரே இருந்த ஊடக நண்பர் சொன்னார்: ‘அண்ணே, நீங்கள் வேட்புமனுவில் பத்துப் பேரை போட்டாலும் அதில ஏழு பேர்தான் எம்.பியாக தெரிவு செய்யப்படுவினம். யாழ்ப்பாணத்துக்கு ஏழு எம்.பிக்கள் தானே?’ என்றார். அப்போதுதான் அவருக்கு அந்த விசயமே தெரியவந்தது. பிறகு சொன்னார், ‘அப்ப ஏழும் எங்களுக்குத்தான்…’ என்று. நான் சொன்னேன், ‘இரண்டாயிரம் வாக்குகள் கிடைச்சால் பெரிய விசயம் அண்ணே…’ என்று. அவருக்கு அடக்க முடியாத கோபம். உடனே, எழுந்துவிட்டார். ‘இப்பிடி அறிவில்லாத ஆட்களை எல்லாம் நண்பராக வைச்சிருக்கிறீர்போல…’ என்று எனது ஊடக நண்பரை ஏசி விட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
பின்னர், தேர்தல் பிரசாரத்திற்காக துரையப்பா விளையாட்டரங்கில் தமிழகத்திலிருந்து பிரபல இசைக்குழுவையும் நகைச்சுவை நடிகர் செந்திலையும் அழைத்திருந்தார். நீண்டகாலத்துக்குப் பின்னர் தமிழக இசைக் கலைஞர்களை காண மக்கள் திரண்டிருந்தனர். அங்கேயும் அவரை சந்தித்தபோது சொன்னார்: ‘பார்த்தீரா ‘ஐசே’ சனத்தை.. இப்பயாவது நம்புகிறீரா?’ என்றார்.
தேர்தலில் அவருக்கு கிடைத்தது ஆயிரத்து நூறு வாக்குகள் தான். இந்தச் சம்பவம்தான் அந்த வேட்பாளரின் பேட்டியைப் பாத்தபோது ஞாபகத்துக்கு வந்தது. சுயேச்சையாகப் போட்டியிடும் குழு ஒன்றின் தலைவர் அந்தப் பேட்டியில் ‘எங்களுக்கு ஆறு ‘சீற்’ கள் கிடைக்கும்’ – என்றார். தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் யாரைப் பாத்தாலும், இப்படித்தான் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். அவர் முன்னணிக் கட்சிகளில் போட்டியிடுகின்றவராக இருந்தாலும் சரி, சுயேச்சையாகப் போட்டியிடுகின்றவராக இருந்தாலும் சரி இதையேதான் சொல்கிறார்கள்.
முக்கிய கட்சி ஒன்றில் போட்டியிடும் இளம் தலை முறை வேட்பாளர் ஒருவரை நேற்று சந்திக்க முடிந்தது. அவரிடம் நான் கேட்க நினைத்ததை அவரே என்னிடம் கேட்டார். ‘எங்களுக்கு ரெண்டு வரும் என்று நினைக்கின்றீர்களா?’. ‘இந்தத் தடவை முதலிடத்துக்கு வரலாம் என்று நம்பப்படுகின்ற கட்சிகளில் மூன்று கட்சிகள் உண்டு. அதில் யார் முதலாவதாக வருவார்கள் என்பது இப்போது சொல்வது கடினம் தான். முதலாவதாக வருபவருக்கு இரண்டு கிடைக்கும்’ என்றேன். அவர் எதனை அடுத்ததாக கேட்கப்போகிறார் என்பதும் தெரிந்ததுதான்.
நான் நினைத் துக்கொண்டிருக்க அவரே கேட்டார். ‘சரி எங்களுக்கு ஒன்றுதான் வருகின்றது என்றால், அதில் யார் வருவார்கள்?’. அதற்கும் நான் சொன்ன பதில் அவருக்கு திருப்தியாக இருந்திருக்கவேண்டும். ‘முதலாவது தெரிவை மாத்திரம் கணக்கில் எடுத்தால் அவர் தான் வருவார். ஆனால், பாராளுமன்றத் தேர்தலில் அப்படி இல்லையே. முதல் இரண்டிலும் வருபவர்களை விட மற்றைய ஏழு பேரும் ஒருவர் வெற்றி பெறுவதற்காக அவர்களின் இரண்டாவது விருப்பு வாக்கைப் பெறுவதற்காக களமிறக்கப்பட்டவர்கள் என்பதால், மற்றைய ஏழு பேரும் எவ்வளவு வாக்குகளை பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் யார் வெற்றி பெறுவார் என்பதை சொல்ல முடியும்.’ சிரித்துக்கொண்டே விடை பெற்றார் அவர்.