அம்பாறை பொத்துவில் அறுகம்பேயில் உள்ள சுற்றுலாப் பிரதேசங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படக் கூடும் எனவும் அங்கு செல்வதை தவிர்க்குமாறும்
அமெரிக்க பிரஜைகளுக்கு, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பயண எச்சரிக்கை விடுத்த நிலையில், அறுகம்பே பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகப்படும்படியான எதையும் அவதானித்தால், 119 என்ற எண்ணிற்கு அழைக்குமாறும் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை, அறுகம்பே பகுதிக்கு விரைந்த முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார், சுற்றுலா முக்கியத்துவம்மிக்க இடங்களில், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை இடைமறித்து சோதனை செய்வதுடன், தற்காலிக வீதி தடைகளையும் ஏற்படுத்தி வாகனங்களைப் பதிவு செய்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவவும் சுட்டிக்காட்டியுள்ளார். அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில், இஸ்ரேலியர்கள் அதிகமாக, அலைச்சறுக்கு விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்களுக்குத் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில், பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், இலங்கையில் உள்ள இஸ்ரேலியப் பிரஜைகளை இலக்கு வைத்து
தாக்குதல்கள் நடாத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.