ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக அறியப்படும் பழனி ஷிரான் க்ளோரியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகக் கருதப்படும் சுமார் 8 கோடி ரூபாய் சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரும் சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசாரணையின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சந்தேக நபர் தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பைத் தளமாகக் கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பழனி ஷிரான் குளோரியனின் சொத்துக்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் சட்டவிரோத சொத்துப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன்படி வத்தளை பலகல வீதியில் குறித்த நபருக்கு சொந்தமான இரண்டு மாடி வீடு மற்றும் சொகுசு கார் ஒன்றை விசாரணை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
குறித்த சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் சந்தேகநபர் சம்பாதித்துள்ளதாகவும் அதன்படி சுமார் 8 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் கிளப் வசந்தவைக் கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்வதற்காக வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரின் படகு ஒன்றையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.குறித்த நபர் குடு செல்வியின் மகன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.