டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைக்குமா இலங்கை ?

0
29

தனஞ்ஜய டி சில்வா தலைமையிலான சுற்றுலா இலங்கை அணிக்கும், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரு போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவதும், இறுதியுமான போட்டி இன்று (05) தென்னாபிரிக்காவின் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிறது.

இரு அணிகளுக்குமிடையில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 233 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது. இந்நிலையில் இன்று ஆரம்பமாகும் 2வது டெஸ்ட் போட்டியானது இலங்கை அணிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. 

காரணம் 2023 – 2025 ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதிபெறுவதாயின் இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல ஏனைய எஞ்சிய அவுஸ்திரேலிய அணியுடனான இரு போட்டிகளையும் வெற்றிகொள்ள வேண்டும். அந்த இரு போட்டிகளும் காலியில் நடைபெறுவதால் இலங்கை அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம். எனினும் இன்று ஆரம்பமாகும் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியை தோல்வியுறாமல் சமநிலையாவது செய்ய வேண்டியுள்ளது. 

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வர இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருமுறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நடப்பு சம்பியன் அவுஸ்திரேலிய அணி, தென்னாரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.

புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. நியூசிலாந்து அணிக்கு இனி டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி இல்லாததால் அந்த அணி இடம் பெறவில்லை. அதனால் இலங்கை அணிக்கு வாய்ப்பு உள்ளது.

இந்திய அணிக்கு இன்னும் 4 (அவுஸ்திரேலியா) போட்டிகள் மீதமுள்ளது. இதில் 2 வெற்றி பெற வேண்டும். தென்னாபிரிக்கா அணிக்கு இன்னும் 3 (1 இலங்கை, 2 பாகிஸ்தான்) போட்டிகள் உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

அவுஸ்திரேலியாவுக்கு 6 (4 இந்தியா, 2 இலங்கை) போட்டிகளில் 4 போட்டிகளிலும், இலங்கைக்கு (1 தென்னாபிரிக்கா, 2 அவுஸ்திரேலியா) 3 போட்டிகளில் மூன்றுமே வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காணப்படுகிறது. 

எனவே இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டி இறுதிப்போட்டி வாய்ப்பை தக்கவைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.