ருஸ்டி என்ற இளைஞனை கைதுசெய்த பின்னர் அரசாங்கம் அவருக்கு எதிரான சாட்சியங்களை தேடியலைகின்றது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந்முஸ்லீம் இளைஞன் கைது அரசாங்கத்தின் இஸ்ரேல் தொடர்பான பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்
செய்தியாளர்மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது இலங்கையில் சமான்ய மக்களின் கருத்துசுதந்திரத்தை தடைசெய்து அரசாங்கம் சந்தேகப்படுபவர்களை குற்றவாளிகளாக்கி தண்டனைகளை வழங்கிக்கொண்டிருந்த சட்டம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இந்த ருஸ்டி என்ற நபரின் கைது, அதன் பின்னர் அரசு வெளியிட்ட ஊடக அறிக்கை,மிகவும் பாரதூரமான விடயங்களை எங்களிற்கு சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக அரசாங்கம் அவரை கைதுசெய்த பின்னர் அவருக்கான சாட்சியங்களை தேடி அலைவது போல எங்களிற்கு தோன்றுகின்றது.
அரசாங்கத்திடம் போதிய சாட்சியங்கள் இருந்தால் அவரைநீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவரை தடுத்துவைப்பதற்கான ஆணையை நீதிமன்றத்தின் ஊடாக பெறமுடியும்,அப்போதுதான் அவராலும் தான் குற்றம்சாட்டப்பட்டவர் இல்லை என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியும்.
எனவே ஒரு தரப்பே யார் குற்றவாளி என தீர்மானிக்கின்ற இந்த சட்டத்தினால் இத்தனை காலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை எடுத்துக்கொண்டால், வைத்தியர் ஷாபி அவர்கள் கட்டாய கருத்தடை செய்கின்றார் அவர் ஒரு தீவிரவாதி என தெரிவித்து அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்தார்கள் , இந்த கைதின் போது விமல்வீரவன்ச உதயகம்மன்பில போன்ற பலரும் பல ஊடகங்களும், அவர்தீவிரவாதி என அனைத்து தரப்பும் குற்றம்சாட்டியிருந்தது அதன் பின்னர் அவர் குற்றம்சாட்டப்பட்ட அனைத்து விடயங்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் எத்தனை ஆண்டுகள் அவரது வாழ்க்கை சிறையில் கழிந்தது அவருக்கு மாத்திரமல்ல அவரது குடும்பத்திற்கும் சமூக்திற்கும்,இந்த விடயத்தால் ஒரு பாரிய சிக்கல் ஏற்பட்டது.பாரிய இனமுறுகலை இது தோற்றுவித்தது , எனவேஅவசரப்பட்டு தீவிரவாதி என முத்திரை குத்துவதாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதாலும் இன முறுகல்கள் இங்கு அதிகரிக்கின்றன என்பதை அரசாங்கம் இங்கு புரிந்துகொள்ளவேண்டும்.
இதேபோல ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற சட்டத்தரணி சாதாரண தொண்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காரணத்தினால்,பயங்கரவாத நிறுவனங்களில் இருந்து பணம் வாங்குகின்றார் என்ற அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவரின் கைதின் பின்னர் கட்டார் சரிட்டி என்கின்ற தொண்டு நிறுவனம் தீவிரவாத நிறுவனமாக பட்டியல் இடப்படுகின்றது.பின்னர் ஒரு வருடத்தின் பின்னர் அது பயங்கரவாதஅமைப்பல்ல என அரசாங்கம் நீக்குகின்றது.பின்னர் இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றார்.
இப்படியே தீவிரவாதி என்பதும் இல்லை என்பதும் குறிப்பிட்டகாலப்பகுதியிலே அவர்களுடைய வாழ்க்கை, நீதிமன்றத்திலும் சிறைச்சாலைகளிலும் கழிவதும் சமூக ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதும்,இந்த வரலாறுகளை நாங்கள் அவதானித்துக்கொள்ளவேண்டும்.
இதுபோல ரம்சிராசீக் உட்பட பல முஸ்லீம் இளைஞர்கள் குற்றங்கள் எதிலும் ஈடுபடாமல் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுதண்டிக்கப்பட்டிருந்தார்கள்.
இதுபோல ஆருரன் உட்பட பல அரசியல்கைதிகள் 15 வருடங்களின் பின்னர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
எனவே குற்றமற்றவர்களிற்கு எவ்வாறு தண்டனையை வழங்க முடியும் என்ற விடயம் ஊடாகாவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நாங்கள் அணுகவேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டம் இந்த நாட்டில் இருக்ககூடாது என்பதை நாங்கள் மீண்டும்மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரே காரணம்,குற்றவாளிகள் தப்பித்தால் கூட நிரபராதிகள் தண்டனைக்கு உள்ளாக கூடாது என்பதே.
இன்னொருவிடயத்தை நீங்கள் அவதானித்து பார்த்தால் தெரியும் ஞானசார தேரர் விமல் வீரவன்ச உதயகம்மன்பில சுமணதேரர் போன்றவர்கள் மிக மோசமான இனவாதத்தினை கக்கி,சமூகங்களிற்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தி சீர்குலைவுகளை ஏற்படுத்தி,சில நேரங்களில் கலவரங்களை உண்டுபண்ணக்கூடிய பேச்சுக்களை பேசி,கொலை செய்வேன் என்ற பேச்சுக்களை பேசி எல்லாம் சாதாரணமாக எந்த சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்படவில்லை.
எனவே அவர்களின் செயற்பாட்டிற்கும் ஒரு விடயமும் தமிழ் முஸ்லீம் மக்களின் கருத்திற்கு ஒரு விடயம் என கையாளப்படுவதும் மிக மோசமானது.
மேலும் முஸ்லீம் இளைஞன் கைது அரசாங்கத்தின் இஸ்ரேல் தொடர்பான பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது.