தெய்வேந்திரமுனை துப்பாக்கிச் சூடு: மேலும் மூவர் கைது!

0
13

மாத்தறை – தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியில், மார்ச் 21ஆம் திகதி (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். அந்த சம்பவம் தொடர்பில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், துப்பாக்கிதாரி என்றும் அவர், இராணுவத்தில் இருந்து தப்பியோடிய நபர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தர  பொலிஸ்  நிலையத்தில் இரண்டு சட்டத்தரணிகளுடன்   திங்கட்கிழமை  (07)  ஆஜரான பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தர, தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 35 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், ஏற்​கெனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் அன்றையதினமே கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது………