யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் ஆடுகளைக் கடத்திச் சென்று அவற்றை இறைச்சிக்காக விற்க திட்டமிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வேலணை பகுதியில் திருடப்பட்ட ஆடுகளை யாழ்ப்பாண நகர் பகுதிக்கு கடத்திச் சென்ற இருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கடத்தி செல்லப்பட்ட 06 ஆடுகள் என்பவற்றையும் மக்கள் மீட்டு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வேலணை பகுதியில் ஆடுகளை களவாடி கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனது வீடொன்றில் கட்டி வைத்துள்ளனர்.
புதன்கிழமை (16) இரவு அந்த ஆடுகளை வாகனம் ஒன்றில் ஏற்றி யாழ்நகர் பகுதிக்கு கடத்தி அவற்றை இறைச்சிக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அறிந்த ஊரவர்கள், வாகனத்தை ஆடுகளுடன் மடக்கி பிடித்ததுடன், ஆடுகளை கடத்தி சென்ற மூவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒருவர் தப்பி சென்ற நிலையில் ஏனைய இருவரையும் மடக்கி பிடித்தனர்.
மடக்கி பிடிக்கப்பட்ட இருவரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் ஆடுகளையும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஊரவர்கள் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தீவக பகுதிகளில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள், மாடுகள் என்பவை களவாடப்பட்டு , இறைச்சிக்காக யாழ். நகர் பகுதிக்கு கடத்தி செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாகவும், அவற்றினை கட்டுப்படுத்தி தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தீவகத்தையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரை வழிப்பாதையான யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் மண்டைதீவு சந்தி பகுதியில் ஊர்காவற்துறை பொலிசாரின், வீதி சோதனை சாவடி அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.