வவுனியா கருங்காலிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கருங்காலிக்குளம் பகுதியில் முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படவுள்ளன எனக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று நள்ளிரவு அப்பகுதிக்குச் சென்ற மடுக்கந்தை விஷேட அதிரடிப்படையினர் மற்றும் வவுனியா வனவளத்துறை அதிகாரிகளால் இக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான 8 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய ஜீப் வாகனத்தையும் கைப்பற்றியதுடன் இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
அதன்படி செங்கலடி பிரதேசத்தில் ஒருவருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியை சேர்ந்த ஒருவருக்குமாக மொத்தம் மூன்று பேர் இன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இறக்காமம் பகுதியில் கொழும்பின் புத்தக கடை ஒன்றில் பணிபுரிந்து தமது இல்லங்களுக்கு திரும்பியிருந்த இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரின் தந்தையருக்கும் அவரின் சகோதரருக்கும் கடந்த 4ஆம் திகதி பெறப்பட்ட PCR மாதிரிகளின் முடிவுகள் நேற்று இரவு கிடைக்கப் பெற்றதை அடுத்து இறக்காமம் பகுதியில் மேலும் இரு நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பில் 47 பேரும், திருகோணமலை 13 பேரும் , கல்முனை 20 பேரும் ,அம்பாறை 7 பேரும் கொரோனா தொற்றில் இனம் கணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்து சமய மக்கள் அனைவரும் இவ்வருட தீபாவளியை வீட்டிலிருந்தவாறே கொண்டாடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு: இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகையானது இம்மாதம் 14 ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.
தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள கொரோனா திடீர்ப்பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில் நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது அனைவரது நல்வாழ்வுக்கும் அவசியம்.
எனவே, எமது வீடுகளிலுள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நாட்பட்ட நோய்களுடன் வாழும் உறவுகள் ஆகியோரைக் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள இந்தப் பண்டிகை தினத்தை அவரவர் வீடுகளிலிருந்து மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறு எமது மக்களிடம் நாம் உரிமையோடு வேண்டிக்கொள்கிறோம்.
அயலவர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் செல்வதையும், புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்கச் செல்வதையும் ஆலயங்களுக்குச் செல்வதையும் இவ்வருடம் தவிர்த்து வீட்டிலிருந்தவாறே பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் எம்மை எதிர்நோக்கியுள்ள சுகாதாரச் சவாலை முறியடிப்போம் எனத் தெரிவித்தார்.
வார இறுதி நாள்களில் பெரும் எண்ணிக்கையில் பொலிஸ் வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் பயணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாள்களில் கூட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளுக்கும் இது பொருந்தும்.
பொது மக்கள் தமது நேரத்தை வீடுகளிலேயே கழிக்குமாறும், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பிரதேசத்தில் இரண்டாவது நபருக்கு கொரோனா நோய்த்தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏறாவூர் நீதிமன்ற வீதியைச்சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஏறாவூர்ப்பிரதேசத்தில் வைரஸ் அழிப்பு மருந்து விசிறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏறாவூர்ப் பொலிஸார் நகர சபையுடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறாவூர்ப் பொதுச்சந்தை, பெண் சந்தை மற்றும் செங்கலடி சந்தை கட்டடங்களுக்கும் இம்மருந்து விசுறப்பட்டன.
பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எச்.டபிள்யு.கே.ஜயந்த மற்றும் நகர சபை முதல்வர் ஐ.அப்துல் வாசித் ஆகியோர் இந்நடவடிக்கையினை மேற்பார்வை செய்தனர்.
தலாத்து ஓயா பிரதேசத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அதிகம் கண்டறியப்படுவதால் நாளை முதல் தலாத்து ஓயா பிரதேசத்தை தனிமைபடுத்துவதற்கு நாளை முதல் மூன்று நாளைக்கு தலாத்து ஓயா பிரதேசம் மூடப்படவிருக்கிறது.
தலாத்து ஓயா ஐக்கிய வியாபார சங்கத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ,இதற்கு முச்சக்கர வண்டி சங்கம் ,மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் ஆகியோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (2020.11.06) தங்கல்லையில் உள்ள டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக், அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வு, கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களுடன், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.
தங்கல்லை பொலொம்மாறுவ புரான வனவாசி, குடா விகாரையின் விகாராதிகாரி, தம்மதின்ன மஹா பிரிவெனாவின் பணி அதிகாரியும், ஓய்வுபெற்ற பிரிவெனா உதவியாளரும், கல்வி பணிப்பாளருமான பண்டிதர் மண்டாடுவே தீரானந்த தேரரினால் இதன்போது வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ரத்மலானை விக்கிந்தாராமய, தங்கல்லை வஜிரகிரி விகாரை, உபய விகாராதிபதி, தென்னிலங்கைக்கான நீதித்துறை சங்கநாயக்கர் மிரிஸ்ஸே தம்மாவங்ஷ தேரரினால் பௌத்த அனுசாசனம் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர ஆகியோரும் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட மற்றும் தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கபில திசாநாயக்க ஆகியோர் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருச்சிலைக்கு குரக்கன் பூக்களிலான மாலையொன்றை அணிவித்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, எஸ்எம்.சந்திரசேன, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கபில திசாநாயக்க மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை கிராம உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) கொலையைக் கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் உடன் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு முன்பு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாந்தை மேற்கில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரச சேவைக்கு சன்மானம் ஆறடி கிடங்கா?, கொலையாளி யார்? விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், அரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள், கிராம உத்தியோகத்தர் விஜியேந்திரனின் கொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம உத்தியோகத்தரான எஸ்.விஜியேந்திரன், கடந்த 3ஆம் திகதி இரவு 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கள்ளியடி ஆத்திமோட்டைப் பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக இடைவெளி பேணல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறியமை தொடர்பில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறுவுறுத்தலுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டதாக இதுவரையில் 2,532 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 382 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்குச் சட்டதை மீறியமை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை ஆறு மணி தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிவரையில் மாத்திரம் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அவர் தெரிவித்தார்.