பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கொரிய பிரதமருக்கும் இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இன்று 2020.10.20 இடம்பெற்றது.
இதன்போது இருதரப்பு உறவை மேம்படுத்தல், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
கொரிய பிரதமருடன் பிரதமர் மகிந்த கலந்துரையாடல்!
மன்னார் பஸார் பகுதியில் பொலிஸ் வாகனம் மோதி சிறுமி உட்பட மூவர் காயம்
மன்னார் பஸார் பகுதியில் இன்று(20) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய கணவன், மனைவி மற்றும்அவர்களுடன் வருகை தந்த 6 வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக மக்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, குறித்த பொலிஸ் வாகனத்தை ஓட்டி வந்த பொலிஸ் சாரதியிடம் மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிஷாடின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (20) குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, மனுதாரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தன்னுடைய கட்சிக்காரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதா இல்லையா என தனக்கு இதுவரையில் எவ்வித அறிவுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குறித்த மனு மீதான விசாரணையை நவம்பவர் 6 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் மனுதாரர் சார்பான உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
20வது திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்ன?
20வதுதிருத்தத்தின் சில பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தி;ன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் சர்வஜனவாக்கெடுப்பும் அவசியம் என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்;றில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளை 20வது திருத்தத்தின் நகல்வடிவு குறித்த நீதிமன்றத்தின் வியாக்கியானம் தனக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்த நகலில் காணப்படும் சில விடயங்கள் அரசமைப்பிற்கு முரணானவையாக காணப்படுகின்றன அவற்றை குழுநிலையில் மாற்றினால் சர்வஜனவாக்கெடுப்பிற்கு அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தின்மேலும் 16 பேருக்கு கொரோனா
கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தின் பணிப்புரியும் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் கொரோனா தொற்றாளர்கள் ஐவர் அடை யாளம் காணப்பட்டதாகத் தவல் வெளியானது.
கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தின் பணிப்புரியும் 16 பேர் கொரோனா தொற்றா ளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிலைமை காரணமாகக் கொழும்பு துறைமுகத் தின் அனைத்து ஊழியர்களும் கொரோனா அபாயத்தில் இருப்பதாகத் துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித் துள்ளன.
கப்பல்துறை உட்பட அனைத்து ஊழியர்களும் ஒரே வா யில் வழியாகத் துறைமுகத்திற்குள் நுழைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் முகமாகச் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்படு வதாகத் கப்பல்துறைமுகத்தின் தலைவர் தெரிவித் துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் ரிசாத்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்றிரவு ரிசாத் பதியுதீன் அனுப்பப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.
சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையில் சிறைச்சாலை கைதிகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங் கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சீனாவின் காலனியா?
இலங்கைக்கும் சீனாவிற்குமான நெருக்கம் தொடர்பில் உலகளவில் கரிசனைகள் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடிகள் அதகரித்துவரும் சூழலில் மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை பெற்றிருக்கின்றது. சீனாவின் கடன்பொறி ராஜதந்திரம் உலக அரசியலில் மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒன்று. சீனாவின் கடனுக்கு பின்னால் சிறிய நாடுகளை திரும்பிச் செல்ல முடியாதவாறு வளைத்துப் போடும் உள் நோக்கம் ஒழிந்திருப்பதாகவே மேற்கு ஆய்வாளர்கள் தொடச்சியாக சுட்டிக்காட்டிவருகின்றனர். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு பெற்றிருப்பது, பாரிய நிதியில் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மேற்கொண்டுவருகின்றமை போன்றவற்றின் ஊடாக ஏற்கனவே இலங்கைக்குள் வலுவாக காலூன்றியிருக்கும் சீனாவிடமிருந்து, அரசாங்கம் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றிருக்கின்றது. சீன – இலங்கை நெருக்கம் தொடர்பில் உள்நாட்டிலும் பலரும் எச்சரித்து வருகின்றனர். ஆளும் பொதுஜன பெரமுனவிற்குள்ளேயே சீனாவுடன் அதிகம் நெருங்கிச் செல்வது தொடர்பில் எச்சரிக்கை செய்வோர் இருக்கின்றனர். அண்மையில் ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச அவ்வாறானதொரு எச்சரிக்கையை செய்திருக்கின்றார். அதாவது, இலங்கை சீனாவின் காலனியாகிக் கொண்டிருக்கின்றது என்றவாறு அவர் எச்சரித்திருக்கின்றார். அதே வேளை விஜயதாச ராஜபக்ச 20வது திருத்தச்சட்டம் தொடர்பிலும் எதிர்ப்பை காண்பித்து வருகின்றார்.
கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் – அவர், ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மறுபரிசீலனை செய்வாரென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமாயின் சீனாவுடன் முரண்படும் முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதற்கான தற்துனிவும் விருப்பும் கொழும்பிடம் இல்லை. ஆனால் கொழும்பு துறைமுக திட்டமும், ஹம்பாந்தோட்டையும் இந்தியாவின் நிரந்தர அச்சுறுத்தலாகவே இருக்கப் போகின்றது. சீனாவிடம் மேலும் கடன்களை பெறும் போது, இலங்கை மீதான சீனாவின் பிடி மேலும் அதிகரிக்கவே செய்யும். இலங்கை தொடர்பில் கருத்துருவாக்கங்களில் ஈடுபடும் மேற்கு அரசியல் அவதானிகளும் இலங்கை படிப்படியாக சீனாவின் பிடிக்குள் செல்வதாகவே எச்சரித்து வருகின்றனர். இந்திய ஆய்வாளர்களும் அவ்வாறானதொரு கருத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கை தொடர்பான விடயங்களில், கடந்த 40 வருடங்களுக்கு மேலாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முன்னாள் இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரியும், இந்திய – இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய அமைதிப்படையின் இராணுவ புலனாய்வு பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றிய, கேர்னல். ஹரிகரன், சீனா முற்றிலுமாக விழுங்குதல் (நுபெரடக) முற்றிலுமாக மூடுதல் (நுnஎநடழி) என்னும் இரண்டு தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே, இலங்கையில் காலூன்றி வருவதாக எச்சரிக்கின்றார்.
இலங்கையின் முன்னணி அரசியல் சிந்தனையாளரான பேராசிரியர். தயான் ஜயதிலகவும், இலங்கை அதன் நடுநிலை வெளிவிவகாரக் கொள்கையிலிருந்து விலகிச்செல்வதாகவும், இது வெளிவிவகாரங்களை கையாளுவதில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். கோட்டபாய ராஜபக்ச தனது பதவியேற்புரையில், தாம் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றை பொறுத்தவரையில் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கை என்பது, பண்டாரநாயக்க வழிவந்த கொள்கையாகும். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்க, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிற்கும் கருத்தியலுக்கும் சார்பாக நாம் இருக்கக் கூடாது – அனைவருக்கும் நண்பர்களே என்னும் அடிப்படையிலேயே இலங்கை இருக்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையிலேயே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அதன் வழிவந்தவர்களே ராஜபக்சக்கள். ஆனால் அண்மைக்காலமாக சீனாவின் பிடிக்குள் இலங்கை செல்வதானது, நடுநிலை கொள்கையில் தொடர முடியுமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கின்றது.
-ஆசிரியர்
மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு!
இந்தியாவின் தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். மழை வெள்ளம் நீடிப்பதால் நகரிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு செல்லவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கே.டி.ராமராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது : 1908 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பதிவான மழையின் அளவு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 37,000 பேர் அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஎச்எம்சி) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 33 பேர், பிற மாவட்டங்களில் 37 பேர் என மொத்தம் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து மழை நீடிப்பதாலும், மேலும் 2 நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் தாழ்வானப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது அரசின் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும். அடுத்து வரும் 2 நாள்களில் ஆயிரக்கணக்கான மக்களை நிவாரண முகாம்களில் தங்கச் செய்துவிடுவோம்.
இதன் மூலம் உயிரிழப்பைக் குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். ஹைதராபாத் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உயிரிழந்த 33 பேரில் 29 பேரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாநகரில் எந்தந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்தந்த காலனி பகுதிகள் வசிப்பவர்களை வீடு வீடாகச் சென்று அவர்களை வெளியேற்றி, நிவாரண முகாம்களில் தங்க வைப்போம். ஓரிரு தினங்களுக்குள் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிவிடுவோம்.
அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதால், மாநில அரசு, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை (என்டிஆர்எஃப்) உடன் ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார் ராமராவ்.
கடந்த சனிக்கிழமை இரவு பெய்த கனமழையால் ஞாயிற்றுக்கிழமை நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு நூற்றாண்டு கால அளவில் கண்டிராத அளவு மழை கடந்த வாரத்தில் பெய்துள்ளது.
பிசிஆர் சோதனை முடிவுகள்குறித்து சந்தேகம்!
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சில பிசிஆர் பரிசோதனை முடிவுகள் குறித்து சந்தேகங்கள் வெளியாகியுள்ளன.
முதலில் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்ட பலர் பின்னர் நோயினால் பாதிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல் தடவை நோயாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் 14 நாட்களின் பின்னரே நோயாளியில்லை என அடையாளம் காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் நோயாளி என ஒருவர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பாதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பு அடுத்த ஓரிருநாட்களில் வெளியாகின்றது என்றால் அதன் அர்த்தம் ஆய்வு கூடசோதனைகளி;ல் தவறு நிகழ்ந்துள்ளது என்பதே என அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளி என அறிவிக்கப்பட்டவர்கள் அடுத்த ஒரிருநாட்களில் நோயாளிகள் இல்லை என அறிவிப்பு வெளியாவது குறித்து கரிசனை வெளியாகியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமை செயலாளர் மருத்துவர் ஹரிதே அலுத்கே தெரிவித்துள்ளார்.
திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயார்- அமைச்சர் பீரிஸ்
ஜனாதிபதிக்கு எதிராக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கும் மாற்றத்தை 20வது திருத்தத்தின் நகல்வடிவில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
குழுநிலை விவாதத்தின் போது இந்த திருத்தத்தை கொண்டுவருவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
குழுநிலை விவாதத்தின் போது நாங்கள் இந்த திருதத்தினை கொண்டுவருவதற்கு தயார் என தெரிவித்துள்ள அமைச்சர் தனது ஆட்சிக்காலத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ச சட்டவிரோதமாக எதனையும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எஙகளுக்குள்ளது என தெரிவித்துள்ளார்..
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவிக்காலத்தின் போது அவர் அடிப்படை உரிமைகளை மீறினார் என எந்தநீதிமன்றமும் தெரிவிக்காது என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.
இரண்டாவது மூன்றாவது நிலை விவாதங்களின் போது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கும் எந்த திருத்தங்களையும் முன்னெடுக்க தயார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.