வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அணிக்கு 25 ஓவர்களைக் கொண்ட MCA ஜீ பிரிவு ஹொண்டா கிண்ண லீக் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமான இந்த லீக் போட்டிக்கு ஸ்டபோர்ட் மோட்டர் கம்பனி பிறைவேட் லிமிட்டெட் 13ஆவது தொடர்ச்சியான வருடமாக அனுசரணை வழங்குகிறது.
வர்த்தக கிரிக்கெட் சங்கத்திற்கும் ஸ்டபோர்ட் மோட்டர் கம்பனிக்கும் இடையிலான பங்காளித்துவமானது வர்த்தக கிரிக்கெட் வரலாற்றில் 3ஆவது நீண்ட உறவைக் கொண்டதாகும். MCA – ஹொண்டா ஜீ பிரிவு லீக் சுற்றுப் போட்டியில் இந்த வருடம் 4 புதிய அணிகளுடன் மொத்தம் 50 அணிகள் 8 குழுக்களில் பங்குபற்றுகின்றன.
அக்விட்டி நொலேஜ் பார்ட்னர்ஸ், பெலவத்த டெய்ரி, கொன்ட்ரினெஸ் சிலோன், வோக் டெக்ஸ் பிறைவேட் லிமிட்டெட் ஆகியனவே இவ் வருடம் பங்குபற்றும் நான்கு புதிய அணிகளாகும். லீக் சுற்றில் 132 போட்டிகளும் நொக் அவுட் சுற்றில் 15 போட்டிகளுமாக மொத்தம் 147 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப் போட்டித் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிபடுத்தும் ஊடக சந்திப்பு எம்சிஏ கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது போட்டிக்கான அனுசரணைக்குரிய காசோலையும் வழங்கிவைக்கப்பட்டது. அனுசரணைக்கான காசோலையை MCA தலைவர் மஹேஷ் டி அல்விஸிடம் ஸ்டபோர்ட் மோட்டர் கம்பனி பிறைவேட் லிமிட்டெட் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சாரக்க பெரேரா வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் ஸ்டபோர்ட் மோட்டர் கம்பனி பிறைவேட் லிமிட்டெட் நிறைவேற்றுப் பணிப்பாளரும் MCA உதவித் தலைவருமான தரிந்தர களுப்பெரும, பொது முகாமையாளர் தமித்த ஜயசுந்தர, MCA உதவித் தலைவர் சிரோஷ குணதிலக்க, அனுசரணைக் குழுத் தலைவர் ஹசித்த தசநாயக்க ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.